Advertisement 300 × 60
BREAKING NEWS
Sri Lanka

இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து – இலங்கைக்கு இந்தியா வழங்கும் தொடர்ச்சியான உதவிகளை நினைவுகூர்ந்த ராதாகிருஷ்ணன்

By admin · August 14, 2026 · 1:54 pm
இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து – இலங்கைக்கு இந்தியா வழங்கும் தொடர்ச்சியான உதவிகளை நினைவுகூர்ந்த ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வேலுசாமி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், அதன் தொடர்ச்சியான வரலாற்றுப் பின்னணியில் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தமை இரு நாடுகளினதும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய இந்தியா தொழில்நுட்பம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரிய வளர்ச்சியை அடைந்து, ஆசியாவிலும் உலக அரங்கிலும் முக்கிய சக்தியாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சிப் பாதையில் கடந்த கால இந்திய தலைவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக மட்டுமன்றி, நட்பு நாடாகவும் மூத்த சகோதர நாடாகவும் இந்தியா தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பேரிடர்கள் மற்றும் அவசர நிலைகள் ஏற்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா உடனடியாக உதவிகளை வழங்கி, இலங்கைக்கு உறுதுணையாக இருந்ததை அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வேலுசாமி ராதாகிருஷ்ணன், இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.