“ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி, 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளோடு தொடர்பு வைத்திருந்ததாகவும், இலங்கையில் நிகழ்த்தியதைப் போலவே தமிழகம் மற்றும் கேரளாவில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறி, கோவையைச் சேர்ந்த 6 இளைஞர்கள்மீது என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் உள்ள தீவிரவாதிகளோடு சமூக வலைதளங்கள் மூலமாகத் தொடர்பு வைத்துள்ள கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள், தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறி, இன்று அதிகாலையிலேயே கோவை, உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட ஏழு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் முடிவில், உக்கடத்தைச் சேர்ந்த முகமது அஸாருதீன், போத்தனூரைச் சேர்ந்த அக்ரம்சிந்தா, தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் ஹிதயத்துல்லாஹ் மற்றும் இப்ராஹிம் என்கிற சாஹின்ஷா குனியமுத்தூரைச் சேர்ந்த எம். அபுபக்கர், போத்தனூரைச் சேர்ந்த சதாம் உசேன், ஆகிய 6 இளைஞர்கள் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இளைஞர்களில் முகமது அசாருதீன்தான் முக்கிய குற்றவாளி. அவர்தான், ‘khilafah GFX’ என்கிற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி, அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பியுள்ளார். மேலும், இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்திய ஜாஹ்ரன் ஹாசிமுடன் ஃபேஸ்புக்கில் நண்பராக இருந்துள்ளார். முகமது அசாருதீன் உள்ளிட்ட ஆறு இளைஞர்களும் இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய ஜாஹ்ரன் ஹாசிம் வெளியிட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தத் திட்டமிட்டதாகக் கைதுசெய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு இவர்கள் நெருக்கமாக இருந்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது, அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து, இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைப் போல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்த்தத் திட்டம் தீட்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆள் சேர்த்துவருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இவர்கள்மீது இருக்கிறது.
இந்த ஆறு இளைஞர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ‘14 செல்போன்கள் , 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்-டாப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், 1 இன்டர்நெட் டாங்கில், 13 டி.வி.டி-க்கள், 300 ஏர் கன் பெல்லட்டுகள் மற்றும் இவர்களின் குற்றங்களை சுட்டிக் காட்டுகின்ற ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் ஆறு இளைஞர்களிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று என்.ஐ.ஏ தனது பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.