ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த முதியவர், செல்லமுத்து. 90 வயதுடைய இவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வேன்மூலம் அழைத்து வரப்பட்டிருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் அந்த முதியவரின் சார்பில் அவரது இளைய மகள் கீதா மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ’90 வயதுடைய தனக்கு கங்கா தேவி, அன்பழகன், கீதா என 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் கங்கா தேவி, அன்பழகன் ஆகியோர் திருமணம் முடிந்த நிலையில் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். இந்நிலையில், எனது சொத்துகளை பிள்ளைகள் மூவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன். இதன்பின் என்னையும் எனது மனைவி நாயகத்தையும் எனது இளைய மகள் கீதாவும் அவரது கணவரும் பார்த்துக்கொண்டனர். திருமணம் முடிந்த உடன் தனிக்குடித்தனம் சென்ற எனது மூத்த மகள் மற்றும் மகன் ஆகிய இருவரும் பெற்றோராகிய எங்களுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. வயது முதிர்ந்த நிலையில் அடுத்தவர்களின் தயவை எதிர்பார்க்கவேண்டிய நிலையில் இருந்த எங்களை பெற்றோர் என்றுகூட கருதி பார்க்கவும் இல்லை; பராமரிக்கவும் இல்லை.

கடந்த 2012-ம் ஆண்டு, எனது மனைவி இறந்துவிட்டார். அந்நேரத்தில், அங்கு வந்த எனது மகன் அன்பழகன், எங்களைப் பராமரித்து வந்த கடைசி மகள் கீதா குடும்பத்தினருடன் சண்டையிட்டு, எனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்றான். ஊர் பெரியவர்கள் தலையீட்டால் எனது மனைவியின் உடலை அவன் வீட்டுக்கு எடுத்துச்சென்று இறுதிச் சடங்கு செய்தான். உயிரோடு இருந்த எங்களைப் பராமரிக்காத அன்பழகன், நான் இறந்த பின்பும் இதேபோன்று பிரச்னை செய்து, எனது உடலையும் எடுத்துச்செல்ல முயலக் கூடும். எங்களைப் பராமரிக்காத மகன், என் உடலுக்கு சடங்குகள் செய்ய நான் விரும்பவில்லை.

எனவே, இறுதிக் காலம் வரை என்னையும் எனது மனைவியையும் பராமரித்துவரும் எனது இளைய மகள் கீதா மற்றும் அவரது குடும்பத்தினரே எனது உடலுக்கு இறுதிக் காரியங்கள் செய்ய வேண்டும். இதுபற்றி எனது சுயநினைவோடு உயில் எழுதியுள்ளேன். எனவே, நான் இறந்த பிறகு எனது மகன் அன்பழகனால், எனது மகள் கீதாவுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தேவையான நிலையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உறுதியளித்தார். பெற்றோரைப் பராமரிக்காத மகன், தனக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூடாது என கேட்டு வயது முதிர்ந்த பெரியவர் காவல் துறையினரை நாடிய சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *