ஈரோடு: தெருநாய் தொல்லை குறித்து, மனு கொடுத்த மக்களிடம், பீட்டாவை கேளுங்கள் என்று, அதிகாரி கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு, 27வது வார்டு ராமசாமி வீதி, பிருந்தா வீதி, தெப்பகுளம் வீதி, கோட்டை வீதி, காமராஜர் வீதிகளில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. தனியாக நடந்து செல்வோரை திடீரென துரத்துகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் பீதி அடைகின்றனர். இரவில் தனியாக செல்லும் பலர் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கோட்டை பகுதி மக்கள், மாநகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாநகர நல அலுவலர் சுமதி, நாய்கள் தொல்லை என்றால், பீட்டா அமைப்பை போய் கேளுங்கள், என, கூறியதாக, விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து மாநகர நல அலுவலர் சுமதியிடம் கேட்டபோது, மனு கொடுத்திருக்காங்க, எனக்கூறி போன் இணைப்பை துண்டித்தார். திரும்ப அழைத்தபோது எடுக்கவில்லை.