சென்னிமலையில், நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலில், தோல்வி அடைந்தவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கி, தேர்தல் அதிகாரி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.சென்னிமலை, செம்மலர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், 137 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்துக்கு தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்க, கடந்த, 8ல் தேர்தல் நடந்தது. ஏற்கனவே மூன்று நிர்வாக குழு உறுப்பினர்கள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் மீதியுள்ள நான்கு நிர்வாக குழு உறுப்பினர்களை புதிதாக தேர்ந்தெடுக்க, தேர்தல் நடந்தது. சுப்பிரமணி, ஈஸ்வரமூர்த்தி, சாமியப்பன், பொன்.ரமணி மற்றும் சவுந்திரராஜன் என, ஐந்து பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள, 137 உறுப்பினர்களில், 125 பேர் வாக்களித்தனர். ஓட்டு எண்ணிக்கை, சங்கத்தின் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளரும், தேர்தல் அலுவலருமான செல்வம் முன்னிலையில், நேற்று நடந்தது. இதில் அதிக ஓட்டுகள் பெற்று சுப்பிரமணி, ஈஸ்வரமூர்த்தி, பொன்.ரமணி, சவுந்திரராஜன் வெற்றி பெற்றனர். சாமியப்பன், 22 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனால், சாமியப்பனுக்கு, நிர்வாக குழு உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட அவர், சங்க அறிவிப்பு பலகையில், தான் வெற்றி பெற்றதை அறிவிக்க வேண்டும் என்று, தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். அவரோ, தவறுதலாக சான்றிதழ் வழங்கி விட்டதாக தெரிவித்தார். ஏற்க மறுத்த சாமியப்பன், சான்றிதழ் என்னிடம் உள்ளது. நிர்வாக குழு உறுப்பினராக ஏற்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் எனக்கூறி சென்று விட்டார். தோல்வி அடைந்தவருக்கு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தந்ததும், அவரோ, அதை வைத்து, நீதிமன்றம் செல்வதாக கூறுவதும், சங்க உறுப்பினர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.