ஈரோடு: அம்மா கால் சென்டர் மூலம் வரப்படும் புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். அல்லது, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என, குறைதீர் கூட்டத்தில், ஈரோடு கலெக்டர் கதிரவன் எச்சரித்தார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர் முகாம், நேற்று நடந்தது. இதில், கலெக்டர் கதிரவன், அதிகாரிகள் மத்தியில் பேசியதாவது: கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனு, அம்மா கால் சென்டர் மூலம் பெறப்பட்டவை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு அனுப்பிய மனுக்கள் மீது, அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, அம்மா கால் சென்டர் மூலம் வரப்படும் மனுக்கள் மீது, பெறப்பட்ட, 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து, முறையான பதிலை அம்மா கால் சென்டரில் பதிவிட வேண்டும். இதில், 48 மனுக்கள் நிலுவையில் உள்ளன. வரும் நாட்களில், நடவடிக்கை எடுக்க தவறினால், அத்துறை அதிகாரிக்கு, சார்ஜ் மெமோ வழங்கப்படும். தற்போது, ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கும், விரைவான தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.