தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்தப் புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அரபிக் கடல் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 12) வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: லட்சத்தீவையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு, மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) புயலாக மாறக்கூடும். இதனால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்கள் புதன்கிழமை (ஜூன் 12) வரைஅரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். அனல் காற்று: சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூன் 12) வரை அனல் காற்று வீசக்கூடும் என்றார். திருத்தணியில் 109 டிகிரி: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 109, சென்னையில் 106, வேலூரில் 103, கடலூரில் 102, புதுச்சேரியில் 101, பரங்கிப்பேட்டை, திருச்சியில் 100 டிகிரி வெயில் திங்கள்கிழமை பதிவானது. கன்னியாகுமரியில் 70 மி.மீ. மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 70 மி.மீ., இரணியலில் 50 மி.மீ., தக்கலை, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 40 மி.மீ., கன்னியாகுமரி, பேச்சிப்பாறை, குளச்சலில் 30 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.