ராமநாதபுரம்:புல்லங்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு சென்றதாகவும் தற்போது சம்பளம் ஏதும் வழங்காமல் அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதால் மீட்க கோரி குடும்பத்தினர் கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் அருகே தொருவளூரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் மலேசியா நாட்டில் சொந்த கம்பெனியில் நல்ல சம்பளம் தருவதாக முருகன் 23, பால்சாமி 39, அப்துல் மாலிக் 39, ஆகியோரை கடந்த 2017ல் தலா 70 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டி வேலைக்கு மலேசியாவிற்கு அழைத்து சென்றார். சில மாதங்கள் மட்டுமே பணம் அனுப்பி வைத்தனர்.அதன் பின் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டு, பாஸ்போர்ட்டை அவர்களிடம் கொடுக்காமல், சம்பளம் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக சொல்கிறார்கள். எனவே மலேசியா துாதரகத்துடன் பேசி மூவரையும் மீட்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.