அடுத்த பகீர்.. மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி தர வேண்டும்.. ராஜன் செல்லப்பா சூசகம்! .
மதுரை: அதிமுகவுக்கு தலைமை வேண்டும் என்று பேட்டி ஒன்றை தந்து தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ள ராஜன் செல்லப்பா, தனது ஆதரவாளர்களுடன் இன்று திடீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில், மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி அளிக்காவிட்டால், அது வேறுகட்சிகளுக்கு செல்லும் நிலை உருவாகும் என அதிமுக தலைமைக்கு சூசகமான கோரிக்கையை ராஜன் செல்லப்பா விடுத்ததாக சொல்லப்படுகிறது . மேலும் இவர் ஏற்கனவே மதுரையில் மேயராக இருந்ததால், தற்போது மகனின் தோல்வியை சரிக்கட்டும் விதமாக அதே பதவியை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ராஜன் செல்லப்பா அதிமுக தலைமையிடம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.
ராஜன் செல்லப்பா “ஒற்றை தலைமை” குறித்து அளித்த பரபரப்பு பேட்டி குறித்து, கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால், இதனையும் மீறி ராஜன் செல்லப்பா ஆலோசனை கூட்டத்தில் அவரது நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருவது அதிமுகவில் பெரிய பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த கூட்டத்தில் ராஜன் செல்லப்பா பேசியபோது, “திருப்பரங்குன்றம் தொகுதியில் கடின உழைப்பு இருந்தும் வெல்ல முடியவில்லை. நெருடல் காரணமாக தோல்வியை சந்தித்தோம். உள்ளாட்சி தேர்தலில் உழைப்பவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். கட்சியில் மூத்த உறுப்பினர்களுக்கு தலைமை மதிப்பு அளிக்க வேண்டும்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி முடிவு எடுக்க வேண்டும். மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இடம் அளிக்காவிட்டால் வேறு கட்சிக்கோ, வேறு ரசிகர் மன்றத்திற்கோ செல்லும் நிலை உருவாகும் என சூசகமாக குடும்ப உறுப்பினருக்கு பதவி வழங்க வேண்டும் கோரிக்கையை ராஜன் செல்லப்பா முன் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது.
R