சமூக விலகலும் சமூக பொறுப்புணர்வும்

*_”ஏழாம் நாள் நிறைவுற்றிருக்கின்றது நாம் ஊரடங்கிப் போய். வாழ்வாதாரத்திற்காக நகரந்தவர்களைத் தாண்டி, பிறர் அனேகமாக அறையினுள் அடங்கித்தான் இருக்கின்றார்கள். ஆனாலும் 6-7 ம் நாளில் உணவு வாங்க, காய்கறி வாங்க , மீன் வாங்க அல்லது இவற்றை விற்க கொஞ்சம் காலை வேளையில் நகர்வது ஆங்காங்கே நடக்கின்றது. “பிக் பாஸ்கட்டிலோ அமேசானிலோ” நாம் கத்தரிக்காய், மிளகாய் வத்தல் வாங்க, நம்மில் அதிகம்பேர் பழகியவர் இல்லை. அந்த அளவுக்கு வசதியும் இல்லை. நேற்றும் இன்றும் கொஞ்சம் கூட்டம் “கபசுரக் குடிநீர்” கசாயபொடி வாங்க ஆங்காங்கே அலைமோதியுள்ளனர். இது கொள்ளை நோய் காலத்தில் மக்களின் பதட்ட மனோபாவ நிலை. ஊடகங்களில் வரும் எண்ணிக்கைகள், சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள், பதட்ட மன நிலையில் புரியப்பட்டுதான், செய்திகளை தவறாய் எடுத்துக்கொண்டு, “எல்லோரும் ஒரு மடக்கு குடித்தால் கரோனா வராதா?” என்ற பரபரப்பில் வாங்க அலைந்தது._*

பொதுச்சுகாதார அறிவுரைப்படி, தடுப்பு ஒதுக்கத்தின் (quarantine) முக்கியத்துவத்தை உணர்ந்த பெருவாரியான சித்த மருத்துவர்கள், “இது அரசுக்கு தரப்பட்ட ஆலோசனை; ‘பாதிப்படைய பெருவாய்ப்பு உள்ள அல்லது கோவிட் பாதிப்புற்றும் எவ்வித குறிகுணமும் இல்லாதவருக்கு முதல்கட்டமாகக் கொடுக்கலாம்’ என அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து. கூடவே இடர்பாடு காலம் வந்தால், ஆயுஷ் துறை எப்படித் தயாராக இருக்க வேண்டும்? என்கிற வழிகாட்டுதல்.” என சொல்லிக் கொண்டே உள்ளோம். கசாயப்பொடி வாங்கி கையிருப்பு வைக்க வேண்டும் என பதறி எங்கும் ஓட வேண்டாம். முதலில் இந்த கசாயம் நேரடியான கரோனாவுக்கான தடுப்பு மருந்து அல்ல. மருத்துவர்கள் அதைத் தேவையுள்ளோருக்குக் கையாள, அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றன. இப்போது நம்மை நோயிலிருந்து காக்கும் ஒரே விஷயம் “ஊரடங்கு” மட்டுமே.

“பிசிஜி போட்டவருக்குக் குறைவான தாக்கமா?, (Aaron miller et al, NYIT, USA) ,ஆப்பிரிக்க இந்திய மரபு வழியினருக்கு மரபணுவில் பாதுகாப்பு உள்ளதா?, அல்லது 3-18 டிகிரியில் உள்ள மக்களுக்கு மட்டும்தான் இந்த வைரஸ் உக்கிரம் காட்டுகிறதா?” (Qasim Bukhari from the Massachusetts Institute of Technology (MIT) in the US)என சிந்திக்க வைக்கும் ஆய்வுக் கட்டுரைகளும், நமக்கு இச்சூழலில் சற்று ஆசுவாசப்படுத்துகின்றன. கொஞ்சம் நம்பிக்கையையும் தருகின்றது. ஆனால் இன்னமும் தீர்க்கமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இன்றைய புள்ளிவிவரம்படி,சீனமும், இத்தாலியும், ஈரானும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியும் மூன்றாம் நாலாம் வாரம் தொட்ட எண்ணிக்கையை நாம் தொடவில்லை. “அதிகம் சோதிக்கவில்லையே!” என சிலர் அங்கலாய்த்தாலும், அந்த நாடுகள் போல் நோய் அவதி ஏற்பட்டிருந்தால்?, எத்தனை மருத்துவமனைகளின் கதவுகள் இன்றளவில் தட்டப்பட்டிருக்கும்? சமூக ஊடகங்களில் செய்திகள் பதறியிருக்கும்? அப்படிப் பெரிதாய் நடக்கவில்லை என்கிற போதே நம் மாநில அரசின் நடவெடிக்கை, நம் பிரதமரின் கைகூப்பிய அறை கூவல், நம்மைப் பாதுகாப்பதாக தெரிகின்றது. வர இருக்கும் அடுத்த 14 நாட்கள் மிக மிக முக்கியமனது. இக்காலகட்டத்தில் நாம் அரசு கூறிய பொதுச்சுகாதார வழிகாட்டுதலை, மிகத்தீவிரமாக பின்பற்றிவிட்டால் நிச்சயம் கரோனாவைக் கடந்து போய்விடலாம்.

நம் அரசாங்கம் இதற்கு கொடுத்திருக்கும் விலை பெரிதினும் பெரிது நண்பர்களே! கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் கோடியை இழக்கின்றோம். 75% பொருளாதாரத்தை இழக்கிறோம். NOMURA India சொல்வது நம் வளார்ச்சி அலகு 4.5% இல் இருந்து -0.5% க்கு தள்ளப்படுகின்றது. இத்தனை வலியோடு, நாம் பணிமுடக்கம் செய்து, வீட்டோடு இருப்பது, கரொனா நம்மை கடித்துக்குதறிச் சென்று விடக் கூடாது என்கிற ஒற்றைக் கவலையில் தாம்!

*தயை கூர்ந்து நண்பர்களே! வெளியே வர வேண்டாம். அரசின் அறைகூவலை முழுமையாய் மதிப்போம். ஆய்வுகளின் முடிவுகள் நம்மை பாதுகாக்குமானால், இன்னும் கூடுதல் மகிழ்ச்சியே! “அதான் இதுவரை வரலையே” என இதற்கும் அலட்சியப்பட்டும், வெளியேற வேண்டாம். இந்த முறை சமூக விலகல் மட்டுமே சமூகப் பொறுப்புணர்வு!*

*கு.சிவராமன்*
*_சித்த மருத்துவர்_*

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.