கொரோனா வைரஸ் விழிப்புணர்வு – பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்- பொதுமக்கள் பாராட்டு*
*📌📌📌விடுமுறை நாளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதிகள் தோறும் சென்ற மாணவ தூதுவர்கள்*
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், விடுமுறை நாளில் வீதி,வீதியாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கைகழுவும் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது கொரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்த மாணவ தூதுவர்கள் நியமிக்கப்பட்டனர்.கொரோனா வைரஸ் குறித்தும்,கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துமீனாள்,செல்வம் , ஆகியோரின் ஆலோசனையின்படி மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஒவ்வொரு தெருவாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில், மாணவர்களே களத்தில் இறங்கி, கை கழுவும் முறைகளை சொல்லிக்கொடுத்தனர் .பொதுமக்களும் ஆர்வத்துடன் தகவல்களை கேட்டு கொண்டனர். மாணவர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது. ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வுக்கு வீடு,வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குழுவாக சேர்ந்து தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள தெருக்களில் பள்ளி விடுமுறையில் பொதுமக்களிடமும்,உறவினர்களிடமும்,தங்களது வீடுகளிலும் கொரோனா வைரஸ் மற்றும் கைகழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.