தமிழகத்தில் உள்ள காவல் சோதனைச் சாவடிகளின் அவல நிலை…!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக – கர்நாடகா எல்லைப் பகுதியான கக்கநல்லா சோதனை சாவடியில், காவலர்கள் தங்கும் இடம் முழுவதும் சேதமடைந்த நிலையிலேயே உள்ளது.
பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸார் தங்கும் வனத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் மின்சாரமோ, குடிநீர் வசதியோ இல்லை என்பது கூடுதல் அவலம்.
இங்கு மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கேரளா – கர்நாடக எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இல்லாத நிலையே உள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் இரண்டு சோதனைச் சாவடிகளில் இயங்கி வருகின்றன.
கீற்றுக்கொட்டாய் பகுதியில் உள்ள சோதனை சாவடியில், செல்போன் சிக்னல் இல்லை என்றும், நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏதுமின்றி வெறுமனே செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.
ஆனால், தமிழக சோதனைச் சாவடியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்நாடக சோதனை சாவடியில், காவலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
துப்பாக்கிகளும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டிருப்பது, அவர்களது பணியை எளிமையாக்கியுள்ளது.
இதேபோன்று, தமிழகம் – கர்நாடகா எல்லை பகுதியை கண்காணிக்க ஜூஜூவாடி பகுதியிலும், ஆந்திரா எல்லை பகுதியை கண்காணிக்க காளி கோவில் பகுதியிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
தகரத்தால் ஆன கொட்டகையில் இரண்டு காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு எரிசாராயம் கடத்தப்படுவதை போலீஸார் தடுத்து வரும் நிலையில், காவலர் பணியை மேற்கொள்ளும் போலீஸாருக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.