ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மாவட்ட, ஒன்றிங்களுக்கான தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு இன்று நடைபெறும் மறைமுக தேர்தல் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 513 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் திமுக அதிகபட்சமாக 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், அதிமுக 214 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

அடுத்தபடியாக, காங்கிரஸ் 22 இடங்களையும், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் தலா 7 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்ற கட்சிகள் 22 இடங்களை கைப்பற்றியுள்ளன.

5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 5088 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் திமுக 2099 இடங்களையும், அதிமுக 1781 இடங்களையும், காங்கிரஸ் 132 இடங்களையும், தேமுதிக 91 இடங்களையும், பாஜ 85 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் 795 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 271 இடங்களையும், அதிமுக கூட்டணி 240 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2199 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

மற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

கட்சி அடிப்படை இல்லாத பதவிகளில் 9619 ஊராட்சி மன்ற தலைவர்களும், 76 ஆயிரத்து 727 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 6ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது.

இதன்படி 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.

மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு காலை 11 மணிக்கும், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு மாலை 3.30 மணிக்கும் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நாளன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கும்.

இந்த மறைமுக தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி கூட்டம், வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்குப்பதிவு செய்தல், முடிவுகளை அறிவித்தல் ஆகிய அனைத்து நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

மேலும் இந்த தேர்தலுக்கு தேவையான உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்:

ஐகோர்ட் உத்தரவு
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பஞ்சாயத்து ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி, தேர்தல் நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆதிகேசவலு நேற்று விசாரித்தார்.

மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, டிஜிபி பிறப்பித்த சுற்ற றிக்கையை தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மறைமுக வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் அதன் வளாகங்கள் முழுமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *