மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம், ஜன. 4-–
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக அனைத்து மாநிலங்களும் இணைந்து, அங்குள்ள சுற்றுலாத்துறையை ஒருங்கிணைத்து இந்திய அளவில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் அமுதவள்ளி தலைமையில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதியில் நடந்தது.
இக்கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலபிரதேசம், புதுடெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாத்துறை ஆணையர்கள், இயக்குனர்கள் 16 பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் இணைந்து பொது முன்பதிவு இணையதளத்தை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக தொடங்குவது என்றும், அதன்மூலம் அந்தந்த மாநிலங்களுக்கு வரும் பயணிகளுக்கு விடுதிகள், ஓட்டல்களில் தங்குவதற்கு கட்டண சலுகைகள் வழங்குவது. புராதன சின்னங்களை பார்க்கும் கட்டணத்தில் சலுகைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அந்தந்த மாநிலங்களில் சுற்றுலா சீசன்களுக்கு ஏற்ப இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி இணையதளம் மூலம் ஒருங்கிணைப்பது என்றும், அதன் மூலம் சுற்றுலா பயணிகளை அதிகளவில் அந்தந்த மாநிலங்களுக்கு வரவழைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி எஸ்.சக்திவேல், சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதி மேலாளர் கே.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.