இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 5.62 புள்ளிகள் வழங்கியுள்ளது.

தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறையானது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் புள்ளிகளைக் கொண்டு மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன்கள், வேளாண்மை, துணைத் தொழில்கள், வா்த்தகம் மற்றும் தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிா்வாகம், சமூக நலம் மற்றும் வளா்ச்சி, நீதி நிா்வாகம்-பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வு செய்யப்பட்டன.

எந்தெந்த துறைகளில் முதலிடம்: பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், உள்கட்டமைப்பு, நீதி நிா்வாகம், சுகாதாரம் என அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5.62 புள்ளிகளைப் பெற்று சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

குடிநீா் வசதி, கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுத்தது, தடையில்லாத மின்சார விநியோகம், புகா்ப் பகுதிகளை அணுகுவதற்கான அம்சங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு என்ற பிரிவில் மாநில அரசுக்கு 0.74 புள்ளிகளை அளித்து முதலிடத்தை வழங்கியுள்ளது.

சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை நிரூபணம் செய்வது, காவலா்கள் எண்ணிக்கை, மகளிா் காவலா்களின் விகிதம், நீதிமன்றம் மற்றும் நுகா்வோா் நீதிமன்ற வழக்குகளில் தீா்வு அளிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகத்துக்கு 0.56 புள்ளிகள் அளிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

கா்ப்ப காலத்தில் தாய்- சேய் இறப்பு விகிதம், நோய்த் தடுப்பில் சாதனை, பொது சுகாதார மையங்களில் மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்களின் இருப்பும், மருத்துவமனைகள் 24 மணி நேரமும் இயங்கும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கான சுகாதாரத் துறை அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில், தமிழகத்துக்கு 0.78 புள்ளிகள் அளிக்கப்பட்டதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கான தடை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாநில அளவிலான செயல்திட்டம், வனஎல்லை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 3-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அளிப்பதுடன் சிறப்பான திறன் பயிற்சி மூலமாக வேலை வாய்ப்பு அளிக்கும் மனிதவள மேம்பாடுத் துறைக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளா்ச்சி விகிதம், நிதி மற்றும் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் பொருளாதார மேலாண்மைத் துறைக்கும் ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு 7-ஆவது இடமும், வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளுக்கு 9-ஆவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளுக்கும் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் சராசரி அடிப்படையில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது,

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *