தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம்களை அமைக்க கூடாது. ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் ஒரு வேட்பாளர் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு முகாம் மட்டும் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும்.

இந்த முகாம்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த முகாம்களில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசாரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும். முகாம்களில் தின்பண்டங்கள் வினியோகம் செய்யவோ, மக்கள் கூடுவதையோ அனுமதிக்க வேண்டாம். வாக்காளர்களுக்கு எந்தவகையிலும் லஞ்சம் அல்லது பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வாக்காளர் தவிர, எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைதல் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது.

2-ம் கட்ட தேர்தல் 30-ந்தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி நடைபெற இருக்கிறது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *