ரஜினி மக்கள் மன்றம் சார்பில்
மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சி
கோவை, ஜுலை.25-
கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நீலிக்கோணம்பாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சி நடத்தப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானம் குறித்த ஆர்வம் உருவாக்கும் நோக்கத்தோடு மாதிரி ராக்கெட் பயிற்சி வகுப்பை ரஜினி மக்கள் மன்றத்தினர் நடத்தினர். பயிற்சி பற்றி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகி மெட்டலார்ஜிக்கல் ஜி.செந்தில்குமார் பேசும்போது, நாங்கள் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு செயல்பட்டு வருகின்றோம். தற்போது அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து கொண்டு செல்கிறது. முதன் முறையாக சென்ற வருடம் நாங்கள் ஈச்சனாரி கணேசபுரம் அரசுப் பள்ளியில் துவங்கினோம். இந்த வருடம் இந்த பள்ளியில் 2&ம் ஆண்டு துவக்கியுள்ளோம். இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் பெருகுவதோடு பள்ளிகளின் வளர்ச்சியும் பெருகும் என்றார்.
பள்ளியில் உள்ள பயிற்சியாளர் ராக்கெட் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், அது எப்படி விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர். பின்பு மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சியும் அளித்தனர். அதில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக ‘சார்ட்’ பேப்பரில் மாதிரி ராக்கெட்டை வடிவமைத்தனர். ராக்கெட் பற்றியும், அதனை அவர்களே செய்தும் பார்த்தது மாணவ&மாணவிகளுக்கு அறிவியல் ஆசையைத் தூண்டும் விதமாக அமைந்தது.
இறுதியில் பயிற்சி அளிக்க வந்தவர்கள் கொண்டு வந்திருந்த வெடி மருந்துப்பொருட்கள் மூலம் மாணவர்கள் செய்த பேப்பர் ராக்கெட்டை விண்ணில் செலுத்த அதைப் பார்த்து மாணவர்கள் பரவசமடைந்தார்கள்.
பின்னர் பேசிய மாவட்ட செயலாளர் கதிர்வேல், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாட்டில் அதுவும் கோவையில் முதன்முறையாக இவ்வாறு நடைபெறுவது மகிழ்ச்சியடையச் செய்கிறது. இது மென்மேலும் வளர வேண்டும் என்பதே ரஜினி மக்கள் மன்றத்தின் வேண்டுகோளாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பொறுப்பாளர் வி.எம்.கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.செல்வராஜ், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் படையப்பா ஜி.செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் டி.செந்தில்குமார், கிழக்கு மண்டல துணைச் செயலாளர் கே.காந்த் கருப்புசாமி மற்றும் மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகள், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் டாக்டர் கே.எம்.செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி உதவி செயலாளர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.