குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 16 மி.மீ மழை பதிவானது. இந்நிலையில், குடியாத்தம் வனப்பகுதிக்கு உட்பட்ட பைலகுண்டா பகுதியில் இருந்து கொண்டபல்லி குடியிருப்பு பகுதியில் திடீரென 8 யானைகள் நுழைய முயன்றது. அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த 23ம் தேதி இரவு திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு பகுதியில் கொத்தூர் என்ற கிராமத்தில் நுழைந்து வீடு, வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றைக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று வசந்தபுரம் காப்புக்காட்டுக்குள் விரட்டினர்.