பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வருகிறது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க நேற்று 3வது நாளாக தடை நீடித்தது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு கடந்த 23ம் தேதி விநாடிக்கு 7,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினமும், நேற்றும் அதே அளவில் நீர்வரத்து நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 40.15 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 41.15 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக உள்ளது.