சேலம்: நாடு முழுவதும் ரயில்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்த வேண்டும் என எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில், தனியார் மயத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க கண்டன கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா கலந்துகொண்டு பேசினார். அப்போது, ரயில்வே தொழிலாளர்களுக்காக எஸ்ஆர்எம்யூ தொடர்ந்து குரல் கொடுக்கும். உரிமைகளை பாதுகாக்கவும், ரயில்வே தனியார் மயத்தை தடுத்து நிறுத்தவும் உறுதி கொண்டுள்ளோம். அதனால், தொழிற்சங்கங்களுக்கிடையேயான தேர்தலில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: மத்திய பாஜ அரசு, லாபகரமாக இயங்கி வரும் ரயில்வேத்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரேபரேலியில் உள்ள மார்டன் கோச் பேக்டரியில் ஆண்டுக்கு 2 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அந்த தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். தற்போது ₹2 கோடிக்கு பெட்டிகளை வாங்கும் நிலையில், தனியாருக்கு கொடுத்துவிட்டால், வரி உள்ளிட்ட பல்வேறு செலவினங்களோடு ₹3.45 கோடிக்கு வாங்க வேண்டிய நிலை வரும். லக்னோ-டெல்லி ரயிலில் சாதாரண மக்கள் அதிகளவு பயணிக்கின்றனர். அந்த ரயிலில் 100 ரூபாய் டிக்கெட் என்றால், 47 ரூபாய் மட்டும் செலுத்துகின்றனர். 53 ரூபாய் மானியமாக ரயில்வே வழங்குகிறது. இதேபோல், ரயில் டிக்கெட்களுக்கு மானியத்தை கொடுத்து வருகிறது. தற்போது அந்த லக்னோ-டெல்லி தேஜஸ் ரயிலை தனியாருக்கு விற்பதன் மூலம் மக்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். தெற்கு ரயில்வே உள்பட ஒவ்வொரு ரயில்வேயிலும் தலா 2 ரயிலை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சென்னை-மதுரை தேஜஸ் ரயில், சென்னை-கோவை ரயிலை தனியாருக்கு விற்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதை நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்த்துள்ளோம். டெல்லியில் நடந்த கூட்டத்தில் தனியார் மயத்தை எதிர்த்து பேசியிருக்கிறேன். இந்த தனியார் மயத்தால் ரயில்வே தொழிலாளர்களை விட பொதுமக்கள் தான் நேரடியாக பாதிக்கின்றனர். ரயில்களை தனியாருக்கு கொடுத்துவிட்டால், கட்டணம் 3 மடங்கு உயரும். அதனால் மத்திய பாஜ அரசை கண்டித்து பொதுமக்கள் போராட வேண்டும். அவர்களின் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். மக்களுடன் சேர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ரயில்வேத்துறை ஆண்டுக்கு 1.78 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. அதில், ரூ.42 ஆயிரம் கோடி மானியமாகவும், ₹40 ஆயிரம் கோடி பென்ஷனுக்கு சென்றாலும், அதிக லாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, தனியார் மயத்திற்கு அரசு முயற்சிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு கண்ணையா கூறினார்.