பதவியை இழக்கும் ஆளுங்கட்சியின் இளம் கவுன்சிலர். மேயர் ரேஸில் இருந்தவர் தகுதி இழப்பு.
கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி.
கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் தகுதி இழக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, கவுன்சிலர் நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார்.
அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இளம் கவுன்சிலர் :
நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும் முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தலின்போது மேயர் ரேஸில் இருந்த நிவேதாவுக்கு மாநகராட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
எதிர்பார்த்தபடி மேயர் பதவி கிடைக்காத நிலையில் மாமன்ற கூட்டங்களில் முறையாக பங்கேற்பதை அவர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், நிவேதா கவுன்சிலர் பதவி தகுதி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதேசமயம், நிவேதா வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றுள்ளதால் தான் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.