கைவிடப்பட்ட மேட்டுப்பாளையம் பை பாஸ்: போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி
மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டத்தை, தமிழக அரசு கைவிட்டதன் காரணமாக, ஊட்டிக்குப் போகும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெறுத்துப் போகின்றனர். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு, மேட்டுப்பாளையம் வழியாக ஆண்டுமுழுவதும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. சீசன் காலத்தில் குன்னுார் மற்றும் கோத்தகிரி பாதைகள், ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றன. கோத்தகிரி வழியே திரும்பி வரும் வாகனங்கள், மேட்டுப்பாளையம் நகருக்குள் அனுமதிக்கப்படாமல், பல கி.மீ., சுற்றி விடப்படுகின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல லட்சம் மக்களின் உல்லாசப் பயணம், வெறுப்புக்குள்ளாகிறது. பை பாஸ் திட்டம் ‘புஸ்’ இந்த நகருக்கு, பை பாஸ் அமைக்க வேண்டுமென்று, மேட்டுப்பாளையம் நகராட்சியால் 1997ல் முன்மொழிவு அனுப்பப்பட்டது. 2007ல், இதற்கான பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியது. தற்போதுள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில், ‘டோல்கேட்’ அமைக்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2012ல், திட்டத்தை ஆணையம் கைவிட்டது. 2014ல், இத்திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை கையில் எடுத்தது. 2016ல் தேர்தல் தேதி அறிவித்த பின், இத்திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, 7.5 கி.மீ., துாரத்துக்கு பை பாஸ் அமைக்க, 81 ஏக்கர் தனியார் நிலம் உட்பட 86 ஏக்கர் கையகப்படுத்த, ரூ.99.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ரோடு அமைக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கியும், அரசாணை வெளியிடப்பட்டது. நிலமெடுப்புக்கான 15(2) நோட்டீசும், இறுதியாக 15(1) நோட்டீசும் தரப்பட்டு, மக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது. இந்நிலையில், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நிலத்துக்கு மறு மதிப்பீடு செய்ததில், ரூ.610 கோடி தேவையென்று கூறப்பட்டதால், திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, மீண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி விட்டது. பத்தாண்டுக்கும் மேலாக நடந்த பணிகள், செலவிடப்பட்ட தொகை, காலம் அனைத்தும் வீணானது. மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த ரோடு இப்போதைக்கு வர வாய்ப்பேயில்லை. இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், சுற்றுலா செல்லும் மக்கள் நொந்து நுாலாகின்றனர். சுற்றுலாத் தொழிலையும், மேட்டுப்பாளையம் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கு, இந்த பை பாஸ் ரோட்டை, தமிழக அரசே விரைவாக அமைப்பதுதான் ஒரே வழி.