திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திருப்பூர் தொழில் வறுமையை நோக்கி செல்கிறது என்று, அண்ணா திமுக மே தின விழா பொதுக்கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின விழா பொதுக்கூட்டம் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் எம்.கண்ணப்பன், எம்.ஹரிஹரசுதன், கே.பி.ஜி.மகேஷ்ராம் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி கலந்து கொண்டு பேசினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது:
-திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் திருப்பூர் பனியன் தொழில் வறுமையை நோக்கி செல்லும். அண்ணா திமுக ஆட்சியில் திருப்பூரில் பனியன் தொழில் செழிப்பாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் தொழில் நலிவடைந்து தொழிலாளர்கள் மீண்டும் ஊரை காலி செய்யும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
8 மணி நேர வேலை என்கிற சட்டத்தை ஒரே நாளில் 12 மணி நேரம் வேலை என்று திமுக அரசு கொண்டு வந்தது.
அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராடுவோம் என்று அறிவித்ததன் பயனாக அந்த சட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் விளையாட்டு மைதானங்களிலும், திருமண மண்டபங்களிலும் மது குடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம் போன்று மது விற்பனைக்கும் திமுக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதே நிலை நீடித்தால் ரேஷன் கடைகளிலும், கோயில்களிலும் மது விற்பனைக்கு அனுமதி கொடுப்பார்கள். இதுதான் திராவிட மாடல். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், வளர்மதி தாமோதரன், வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பா.சு.மணிவண்ணன், மாவட்ட பேரவை துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, பனியன் சங்க துணைத்தலைவர் கேபிள் பாலு, 55வது வட்ட செயலாளர்கள் பாலதண்டாயுதம், கந்தவேல், நிர்வாகிகள் டி.டி.பி.தேவராஜ், மணி, தங்கவேல், ரவீந்திரன், பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், திருப்பூர் பனியன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.