மனதின் குரல்-இந்தியாவின் பாரம்பரிய கைத்தறிகளின் குரல்
மனோஜ் குமார், தலைவர்,
காதி மற்றும் கிராமத் தொழில்கள்
ஆணையம், இந்திய அரசு
சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசிய இயக்கத்தின் பெருமையாக ‘காதி’ இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, சுதேசியின் பெருமையாக மாறியது ‘காதி’. தற்போது ‘தன்னிறைவு இந்தியா’ என்ற அடையாளமாக ‘காதி’ உள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் ‘ என்ற மந்திரம் காதியை ‘உள்ளூர் முதல் உலகளவில்’ கொண்டு சென்றுள்ளது. இப்போது காதி வெறும் சின்னமாக மட்டும் இல்லாமல் ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஊடகமாக மாறியுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு, மகாத்மா காந்தி இந்தியாவின் தேசிய பாரம்பரியமான ‘காதி’யை அகிம்சை இயக்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாக மாற்றினார்; அதே காதி புதிய இந்தியாவின் கைவினைஞரான மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் ‘தன்னிறைவு இந்தியா’ என்ற அடித்தளத்தின் மிக சக்திவாய்ந்த தூணாக மாற்றப்பட்டது.
பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி காதியை தன்னிறைவு பெறச் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது, இதன் விளைவாக 2021-2022 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் மொத்த வணிகம் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியது வரலாறு.
எந்தவொரு காதிப் பொருளையும் வாங்கும்போது, இரவு பகலாக உழைக்கும் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறோம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இது பிரதமரின் தலைமையிலான கிராமப்புற இந்தியா மீதான தற்போதைய அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. சமீப ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் காதிப் பொருட்களுக்கான வரவேற்பு அதிகரித்து, அதன் பலன்கள் அடிமட்டத்தில் பணிபுரியும் காதித் தொழிலாளர்களுக்குச் சென்றிருக்கிறது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், கைவினைஞர்களின் ஊதியத்தை 33 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியுள்ளது. 2014 முதல், ஊதியம் 150 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு, காதி மற்றும் கிராமத் தொழில்துறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசின் முதன்மையான வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. 2014 அக்டோபர் 3ந்தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ மூலம் காதித் துறைக்கு புத்துயிர் அளிக்க காதியை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். “நீங்கள் ஏதேனும் காதிப் பொருளை வாங்கினால், ஒரு ஏழையின் வீட்டில் முன்னேற்றதிற்கான விளக்கை ஏற்றுகிறீர்கள்” என்று பிரதமர் கூறினார். இதன் விளைவாக, காதி விற்பனையில் ஒரு வாரத்திற்குள் 125% அதிகரிப்பு காணப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள தொழில்களில் வரலாறு காணாத சரிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் புதிய ஸ்டார்ட்அப்களை ஏற்படுத்துவதில் சாதனை படைத்துள்ளது.
பிரதமர் ‘மனதின் குரல் ‘ நிகழ்ச்சியில் காதியை ஊக்குவித்ததால், சாதாரண நாட்களிலும் காதி விற்பனை அதிகரித்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால், காதி, குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமான பிராண்டாக மாறியுள்ளது. இது நாட்டின் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களின் பிரதான தேர்வாகவும் உள்ளது.
பிரதமர் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வரும் 30ந்தேதி, நூறு அத்தியாயங்களை நிறைவு செய்யப் போகிறது. காதியை நாம் ஏற்றுக்கொண்ட விதத்தில், முன்பை விட ‘உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம்’ என்று உறுதிமொழி எடுத்து, இந்தியாவை எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்றதாக உருவாக்குவோம்.