ஒரே நாளில் 2.51 கோடி தடுப்பூசி செலுத்தியதில் இந்தியா வரலாறு படைத்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் மனித உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது
இந்தியாவின் தடுப்பூசி மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் குறித்து ஸ்டாண்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை
-வினோத் கே பால்,
நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்),
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாத் தொடங்கியது. தற்போது வரை 220 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 மாதங்களில் 220 கோடி தடுப்பூசிகளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இதேபோல் ஒரே நாளில் 2.51 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தியதுடன் 9 நாட்கள் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்த தடுப்பூசி சாதனைக்கு அடிக்கோலியது உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட 2 நிறுவனங்களின் தடுப்பூசிதான். இதில் 97 சதவீத தடுப்பூசிகள் பொது சுகாதார மையங்கள் வாயிலாக இலவசமாக செலுத்தப்பட்டன.
ஐசிஎம்ஆர்-ரின் தரவுகளின்படி, முதல் டோஸ் தடுப்பூசி 99 சதவீத உயிரிழப்புகளையும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 99.4 சதவீத உயிரிழப்புகளையும் தடுத்துள்ளது. 2021ம் ஆண்டில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி இயக்கத்தின் மூலம் 34 லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஸ்டாண்ஃபோர்டு பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி கொவிட் உயிரிழப்புகளின் சதவீதம் குறைந்த நிலையில், தடுப்பூசி இயக்கங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகத்தின் அறிக்கையின்படி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தடுப்பூசி விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல், நிவாரணம் அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களிலும் மத்திய அரசு கவனம் செலுத்தியதுதாகவும், தடுப்பூசி முகாம்கள்தான் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் நோய்ப்பரவல் தடுப்பு மேலாண்மை செயல்திட்டமாகும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அம்சங்கள், ஒருபுறம் உயிரைப் பாதுகாக்கும் பணியையும், மறுபுறம் பொருளாதார ரீதியிலான தாக்கத்தைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றின. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நீடித்த வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைப்பதுடன், வைரஸிற்கு எதிராக நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. இந்த நோய்த் தடுப்பு மேலாண்மைக்கு மத்திய அரசின் இ-சஞ்ஜீவனி, ஆரோக்கிய சேது, உள்ளிட்டத் திட்டங்கள் பெரிதும் உதவி புரிந்தன. இதைத்தவிர, பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான பரிசோதனை, தனிப்படுத்திக்கொள்ளுதல், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்தல், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, மாவட்ட மற்றும் மாநில அளவில், வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. வைரஸ் பரவலைத் தடுக்கக் கையாண்ட, எல்லாவிதமானக் கண்காணிப்பு அணுகுமுறை நல்லப்பலனைக் கொடுத்தது.
கடந்த 2020ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்தியாவால் காப்பாற்ற முடிந்ததாக, 2020-21ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் வைரஸ் பரவல் தொடங்கிய 50 நாட்களிலேயே உச்சக்கட்ட நோய்தொற்றை எதிர்கொண்ட நிலையில், இந்தியா மேற்கொண்ட வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால்,175வது நாளில்தான் நோய்த் தொற்று தீவிரம் அடைந்தது. ஊரடங்கு உத்தரவு மற்றும் தொடர்ச்சியான நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன், நீடித்த பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவி செய்துள்ளது. அரசு அறிவித்த நிவாரண உதவி, மக்களின் நிதிச்சுமையைக் குறைப்பதில் முக்கியப்பங்காற்றியது.
பிரதமரின் ஏழைகளுக்கான உணவு வழங்கும் திட்டம் மூலம் முதியோர், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைத் தொழிலாளர்கள் என 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் லட்சக்கணக்கானோர் பட்டினியில் சிக்குவது முற்றிலும் தடுக்கப்பட்டிருக்கிறது.