இந்தியாவின் தனித்துவமான எரிசக்தி வழிமுறைகள்

திரு.ஹர்தீப் சிங் பூரி

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ள நிலையில் நாட்டின் எரிசக்தித் தேவை, 2020ம் ஆண்டுக்கும் 2040ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 25% அதிகரிக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டின் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு ஏற்ப எரிசக்தி விநியோகம் மற்றும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும். இதனால் நமது எரிசக்தி உத்தியை நடைமுறைக்கு ஏற்ப சமநிலையுடன் தனித்துவமாக அணுக வேண்டிய தேவை உள்ளது.

 

இதைச் சமாளிக்க இந்தியா என்ன செய்கிறது?

 

அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 35% முதல் 40% வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோதும் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய 85% கச்சா எண்ணெயையும் 55% இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்யும் இந்தியாவில் டீசல் விலை கடந்த ஓராண்டில் குறைந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் எரிவாயு பற்றாக்குறையும் மின்சாரத் தட்டுப்பாடும் ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் எந்தப் பற்றாக்குறையும் ஏற்படவில்லை. வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட இந்தியாவில் எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகவில்லை.

 

நாட்டு மக்கள் அனைவருக்கும் எரிசக்தி நீதியை உறுதி செய்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவில் எரிசக்திப் பற்றாக்குறை ஏற்படவில்லை. மத்திய அரசும் பிஜேபி ஆட்சி செய்யக் கூடிய பல மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் மதிப்பு கூடுதல் வரியை இருமுறை பெரிய அளவில் குறைத்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்த போதும், இந்திய நுகர்வோரை அது பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளில், கச்சா எண்ணெய் விநியோக கட்டமைப்பு நாடுகளுடனான வாங்கும் நடைமுறைகளை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது. 27 நாடுகளிலிருந்து 39 நாடுகளாக இதன் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்துள்ளது. நம்பகமான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகின் 3வது பெரிய நாடாக உள்ள இந்தியா தனது நுகர்வோருக்கு, வாங்கக் கூடிய விலையில் எரிசக்தி விநியோகத்தை மேற்கொள்வதுடன் சர்வதேச சந்தையில் ஏற்படும் தாக்கங்கள் மக்களைப் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

பாரம்பரிய எண்ணெய் துரப்பண பணிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற எரிசக்தி மாற்ற நடைமுறைகள் என இரண்டிலுமே இந்தியா கவனம் செலுத்துகிறது. எனினும் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கருத்துகளுக்கேற்ப பருவநிலை மாற்ற செயல்பாடுகளில் இந்தியா உறுதியுடன் உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 1 பில்லியன் டன் அளவுக்கு குறைக்கவும் 2070ம் ஆண்டுக்குள் அதை பூஜ்ஜியமாகக் குறைக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

 

பெட்ரோ ரசாயனப் பொருட்கள் உற்பத்தியையும் இந்தியா அதிகரித்து வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா உலகில் 4ஆவது பெரிய நாடாக உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் விலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும். எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்திலும் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் 9.5 கோடி குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குழாய் வழி எரிவாயு இணைப்பு 2014ம் ஆண்டில் 22.28 லட்சமாக இருந்த நிலையில் 2023ம் ஆண்டில் 1 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டில் 938 ஆக இருந்தது. 2023ம் ஆண்டில் அது 4900ஆக அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டில் 14,700 கிலோ மீட்டராக இருந்த குழாய் வழி எரிவாயு கட்டமைப்பின் நீளம் 2023ம் ஆண்டில் 22,000 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

பெட்ரோலில் எத்தனால் கலப்பின் மூலம் இந்தியா, உயிரி எரிவாயுவிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.19,744 கோடி மதிப்பில் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருள் இறக்குமதியால் ஏற்படும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செலவுகளைக் குறைக்க முடியும்.

 

சிறந்த எரிசக்தி உத்தியைப் பின்பற்றுவது போலவே ஒருங்கிணைந்த நடைமுறைகளின் மூலம் வாகனப் போக்குவரத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள்களைப் போல மின்சார வாகனங்களுக்கும் இந்தியா மிகப் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்திக்கு, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் அரசு ஆதரவு அளிப்பதுடன் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.

 

2047ம் ஆண்டில் நமது அமிர்தகால இலக்காக 26 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடு என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் எரிசக்தி சுதந்திரம் மற்றும் தனித்துவமான எரிசக்தி நடைமுறைகளுக்கான உத்திகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக இவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *