இந்தியாவின் ‘ஆப்ரேஷன் தோஸ்த்’ இதயங்களையும், மனதையும் வென்றது.
லெஃப்டினன்ட் ஜென்ரல் டாக்டர் சுப்ரதா சஹா
துருக்கியின் தெற்குப் பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலும், சிரியாவின் வடக்குப் பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலும், மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலாவது நிலநடுக்கம் ஃபிப்ரவரி 6 அன்று, இந்திய நேரப்படி காலை 6.47-க்கு காசியான்டெப் நகரம் அருகே நிகழ்ந்தது. முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்ட 12 மணிநேரத்திற்குப் பிறகு 2-வது நிலநடுக்கம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் நிகழ்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஆப்ரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்தியா மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. இதில் தேசியப் பேரிடர் மீட்புப்படை மற்றும் தேடுதல் பணியைச் சேர்ந்த குழுக்கள், 60 பாராசூட் பிரிவு மருத்துவமனைக் குழுக்கள் இடம் பெற்றிருந்தன.
மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை, மயக்கவியல், மூட்டு சிகிச்சை, முக அறுவை சிகிச்சை, பொதுச் சுகாதார நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் உள்ளிட்ட 99 பேர் மருத்துவ, அறுவை சிகிச்சை, பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் இந்திய விமானப் படை விமானம் மூலம் ஹின்டன் விமானப் படைத் தளத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். ஃபிப்ரவரி 8-ம் தேதி அன்று, துருக்கியைச் சென்றடைந்த 3 மணிநேரத்திற்குள் ஹத்தேவில் உள்ள இஸ்கென்டெரனில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் காசியான்டெப் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கினர்.
இந்திய தரப்பில் அமைக்கப்பட்ட தற்காலிகப் பிரிவு மருத்துவமனை மூலம் 12 நாட்களில் மட்டும் காயமடைந்த 3,604 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசரகால மருத்துவ உதவி, பல் சிகிச்சை மற்றும் முக்கிய அறுவை சிசிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.
சேவைப் பணி முடிந்த பிறகு, இந்தியக் குழுவினரை உணர்ச்சிப் பெருக்குடன் துருக்கி மக்கள் வழி அனுப்பி வைத்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த துருக்கி தன்னார்வலர் உலாஸ் குடும்பத்தினர் “99 பேர் உடைய மருத்துவக் குழுவினருடன் நீங்கள் வந்தீர்கள் ஆனால், நீங்கள் இந்தியாவிற்கு திரும்பிச் செல்லும் போது, ஒட்டுமொத்த துருக்கி மக்களின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டனர். துருக்கியின் இஸ்கென்ட்ரெம் பகுதியைச் சேர்ந்த இடா என்பவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நீங்கள் அனைவரும் எங்களுடைய கதாநாயகர்கள். நாங்கள் துன்பப்படாத நாட்களில் (மகிழ்ச்சியான தருணங்களில்) உங்களைக் காண்போம். நான் இந்தியாவிற்கு வருகை தருவேன். எதிர்காலத்தில் ஹத்தேவில் மீண்டும் உங்களைக் காண நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பேரிடரை பன்முகத்தன்மையுடன் எதிர்கொள்வதிலும், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் முன்னணியாகத் திகழ்வதிலும் இந்தியாவின் ஆப்ரேஷன் தோஸ்த் மற்றுமொரு நடவடிக்கையாக இருந்தது.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி-20 தாரகமந்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருந்ததாகவும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உலகில் எந்தப்பகுதியில் பேரிடர் ஏற்பட்டாலும் அதற்குத் தேவையான உதவிகள் மற்றும் மேலாண்மைகளை இந்தியா வழங்குவதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு சான்று.