பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை
எப்போதும் படிப்பினையை அளிக்கும் எனது இந்தியப் பயணம்: பில்கேட்ஸ்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டப் பிறகு தற்போது நாடு திரும்பினேன். என்னால் அங்கு மீண்டும் செல்வதற்கு காத்திருக்க முடியாது.
நான் இந்தியாவிற்கு செல்வதை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் ஒவ்வொரு பயணமும் நான் கற்றுக்கொள்ள அபரீமிதமான வாய்ப்புகளை அள்ளித் தருகின்றன.
கடந்த வாரம் மும்பை, டெல்லி, பெங்களூருவிற்கு பயணம் மேற்கொண்டபோது பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அரசியல் தலைவர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள், புரவலர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர்களுடனான சந்திப்பு, அறிவியலையும் புத்தாக்கத்தையும் இணைத்து உலக நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் சுகாதாரம், பருவநிலை மாறுபாடு மற்றும் வளர்ச்சிக்கான சவால்களை எவ்வாறு எதிர்கொண்டு தீர்வு காண்பது என்பதை எனக்கு கற்பித்தன.
இந்தியப் பிரதமருடனான தருணம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். இந்தச் சந்திப்பின் போது சுகாதாரம், மகளிருக்கு பொருளாதார ரீதியிலான அதிகாரமளித்தல் மற்றும் மின்னணுமயமாக்கலில் எவ்வாறு நாட்டை முன்னேற்றினர் என்பது குறித்து கேட்டறிந்தேன். இன்றைய மிகப் பெரிய சவால்களை இந்தியா முறியடித்து வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுவது எனக்கு வியப்பளிக்கிறது.
காசநோயை எதிர்கொள்வது: எனது இந்தியப் பயணம் மும்பையில் இருந்து தொடங்கியது. அங்கு ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் காசநோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி மருத்துவ சேவை அளிக்கும் நகர்ப்புற சுகாதார மையத்தைப் பார்வையிட்டேன். உலக நாடுகளை அச்சுறுத்தும் காசநோய் இந்தியாவிற்கு சுமையாக உள்ளது. அதனால்தான் இதுபோன்ற மருத்துவ வசதிகளை அந்நாடு உருவாக்கியிருப்பதுடன், சுகாதாரப் பணியாளர்கள் உயிர்காக்கும் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.
பருவநிலை மாறுபாடு: எனது பயணத்தில் முதல் நாள் காலை புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றேன். அங்கு வறட்சி, வெள்ளம் போன்ற மாறுபட்ட காலநிலைகளை எதிர்கொள்ளும் பயிர்களை அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்குவது குறித்துக் கேட்டறிந்தேன். இந்த நிறுவனம் மாறுபட்ட பருவ நிலைகளை எதிர்கொள்ள உதவும் புத்தாக்கங்களை விவசாயிகளுடன் எப்படி பகிர்ந்துகொள்கிறது என்பது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.
சிறந்த ஊட்டச்சத்து: இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உடனான சந்திப்பின் போது கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிறுதானிய கிச்சடியை சமைத்துப் பரிமாறினோம். இதைத் தொடர்ந்து நான் அன்னப் பிரசாத சம்பிரதாயத்தில் கலந்து கொண்டேன். அதாவது, பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு முதல் முறையாக உணவு ஊட்டும் சம்பிரதாயம். அப்போது பச்சிளங்குழந்தைக்கு சிறுதானியத்தால் சமைக்கப்பட்ட இனிப்புச் சுவைக் கொண்ட உணவை நான் ஊட்டினேன். இவ்வாறாக இந்திய மக்களுக்கு ஊட்டச்சத்துக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றும் முயற்சிக்காக அமைச்சருக்கு பாராட்டுத் தெரிவித்தேன்.
சாலையில் கார்பன் உமிழ்வற்ற உலகம்: 3 சக்கரங்களைக் கொண்டது இந்த வாகனம். எந்த வாயுவையும் வெளியேற்றாது, சத்தமின்றி ஓடும் வாகனம். அதுதான் மின்சாரம் வாகனம். டெல்லியில் மின்சார வாகனத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது பல வேடிக்கையான அனுபவம் கிடைத்தது. எனினும் பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ள இத்தகைய புதிய புத்தாக்க முயற்சிகள் உதவுவது ஆச்சர்யமூட்டுகிறது.
மின்னணுப் பணப்பரிமாற்றம் குறித்தப் பேச்சு: ஜி-20 மாநாடுகளின் ஒரு பகுதியாக புதுதில்லியில் நடைபெற்ற மின்னணுக் கருவிகளின் பயன்பாடு குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசினேன். தரவுப் பரிமாற்ற நடைமுறை மற்றும் பணப்பரிமாற்றங்கள் முறை, குறைந்த வருவாய் ஈட்டும் மக்கள் மற்றும் பெண்களின் நிதிப் பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டேன்.
மேலும் நான் பெங்களூரு சென்றபோது, ஹலசரு சமூகத்தினரை சந்தித்தேன். அவர்களிடம் இருந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் எவ்வாறு ஏழை மக்களிடம் சென்றடைந்திருக்கிறது என்பதையும் அவர்களுக்கு எவ்வாறு இது உதவுகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். இந்திய அஞ்சல்துறை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய (ஐபிபிபி) எனப்படும் இந்திய அஞ்சல் நிதி வங்கி மூலம் நகர்ப்புற சமூகத்தினருக்கு வீட்டு வாசலுக்கே வங்கிச் சேவைகள் சென்றடைந்தன. அதேபோல் டிஜிட்டல் முறையான ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஐபிபிபி மூலம் ஒரு பெண் எளிதாக வங்கிக் கணக்கு தொடங்கியதையும் நேரில் காண முடிந்தது.
ரெய்சினா உரையாடல்: பூகோள அரசியல் மற்றும் பூகோளப் பொருளாதாரம் சார்ந்த வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு வருடாந்திர ஜி-20 உறுப்பு நாடுகளின் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடத்தப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளிலிருந்து நாம் பெற்ற படிப்பினைகள், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் இலக்கு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இவ்வாறாக அந்த வாரம் முழுவதும் நான் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும் என்னுடைய இந்தியப் பயணம் எதிர்காலம் சார்ந்த உண்மையான உந்துசக்தியாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. தற்போது உலக நாடுகள் மிகப் பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், எனது இந்தியப் பயணம், பிரச்சனை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நம்முடைய திறமையைக் கொண்டு தீர்வுகாண முடியும் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவதாக அமைந்தது,