உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் ஜி20 இந்திய தலைமைத்துவம்

– திரு அலோக் குமார், எரிசக்தித் துறை செயலாளர்

 

‘வசுதைவ குடும்பகம்’ என்ற ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கருப்பொருள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதன் கருத்தை வலியுறுத்துகிறது. இந்த உலகளாவிய ஒற்றுமையை பறைசாற்றுவதற்கு இந்தியாவின் ஜி20 தலைமை தொடர்ந்து பாடுபடும் என்ற பிரதமரின் வார்த்தைகளுக்கு இணங்க “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்பது தாரக மந்திரமாக பின்பற்றப்படுகிறது.

 

அணுகல், பாதுகாப்பு, குறைந்த செலவு முதல் பருவநிலை மாற்றம் என்ற உலகளாவிய பிரச்சனை வரை எரிசக்தி துறையில் உலகம் இன்று ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. நிலையான எரிசக்தி சார்ந்த எதிர்காலத்திற்கு இது போன்ற பிரச்சினைகளை முழுமையாக எதிர்கொள்வது முக்கியம்.

 

குறைவான கார்பன் மேம்பாட்டு உத்தியில் இந்தியா தீவிரமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள எரிசக்தி ஆதாரங்களில் 42.25%, புதை படிவம் அல்லாத ஆதாரங்கள்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகளவில் இந்தியா இன்று மூன்றாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. 2021-ஆம் ஆண்டில் மட்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் செய்யப்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் சர்வதேச அளவில் மிக அதிகமான வளர்ச்சியை (70%) இந்தியா பதிவு செய்தது.

 

பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு நிலையான தீர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியா விரைவான முயற்சிகளை எடுத்து வருகிறது. 2030 வரை கார்பன் வெளியீடுகளை ஒரு பில்லியன் டன்னாக குறைப்பது தொடர்பாக 2021-ஆம் ஆண்டு கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உறுதி மொழியைத் தொடர்ந்து இந்த முயற்சி தீவிர படுத்தப்பட்டுள்ளது. பருவநிலை மாற்ற செயல்பாட்டு குறியீட்டில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

 

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கான முயற்சிகள், உலகின் எரிசக்தி துறையின் மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய வெளியீடுகள் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. புதை படிவம் அல்லாத மின்சார உற்பத்தியின் திறனை 2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட்டாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

நிலையான வாழ்க்கைமுறைக்கு புதிய அணுகுமுறையை ஏற்படுத்தக்கூடிய திறன் உள்ள துறைகளில் கவனம் செலுத்த ஜி20 இந்திய தலைமைத்துவம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் மற்றும் வேளாண்மை முதல் கல்வி வரை தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளில் மேம்பட்ட தகவல்களை பரிமாறுவது, மனிதர்களை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப அணுகுமுறை போன்ற நமது நம்பிக்கைகள் செயல்முறைப்படுத்தப்படும். உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை எடுத்துரைக்க ஜி20 மன்றம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *