நாட்டில் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன
-மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தகவல்
சென்னை, டிசம்பர் 05, 2022
கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும்கூட மீன் சார்ந்த ஏற்றுமதி 32 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. மனிதர்களுக்கு இருப்பது போன்றே கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன என்று தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் சார்பில் இன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்தார்.
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன. ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மை மகளிர் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளினால் பெண்கள் இப்பொழுது சமூகப் பாதுகாப்போடும் கௌரவமாகவும் வாழ முடிகிறது. 2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே நமது இலக்கு என்று டாக்டர் எல்.முருகன் மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மோடி@20 கனவாகும் நனவுகள் என்ற நூலையும் அம்பேத்கர் & மோடி என்ற நூலையும் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்த்தாலேயே நம் நாட்டின் வளர்ச்சியை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் பாராட்டத்தக்கவை ஆகும். உள்கட்டமைப்பில் பிரமிப்பான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. நம் நாட்டை உலக அளவில் சிறந்த நாடாக தலைமையேற்கும் நாடாக பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று முதலமைச்சர் ரங்கசாமி தனது உரையில் தெரிவித்தார்.
துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், கோவிட் பெருந்தொற்றில் இருந்து 130 கோடி மக்களையும் காப்பாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கே சேரும். உள்நாட்டிலேயே கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, உற்பத்தி செய்து பெருந்தொற்றை நாம் வென்றுள்ளோம் என்று கூறினார். பிரதமர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களுக்கான முடிவாகவே உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன்பூங்குன்றனாரின் கருத்து இப்பொழுது பிரதமரால் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம், பொதுப்பணி அமைச்சர் திரு க.லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் திரு.க.ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் திரு.ஏகே.சாய் ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு பெ.இராஜவேலு, முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் திரு.ஏ.ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக கள அலுவலகத்தின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. முன்னதாக கண்காட்சியை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் திரு. தி.சிவக்குமார் கண்காட்சி குறித்து விளக்கிக் கூறினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசு செயலர் திரு.இ.வல்லவன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனர் திரு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.