Home

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ ‘‘காவல் கரங்கள்‘‘

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து, மீட்பு பணி சேவை, தன்னார்வலர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடவும், அவர்களது புகார் மனுக்கள் மீது குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க, சுற்றுக் காவல் ரோந்து மக்களை சந்தித்து குற்றங்களை கட்டுப்படுத்த நடை ரோந்து, கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்க வாரத்தில் 3 நாட்கள் காவல் ஆணையாளரிடம் வாட்சப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவித்தல், 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களிடம் வாரத்தில் 2 நாட்கள் வாட்சப் வீடியோ கால் மூலம் புகார் தெரிவித்தல், இரவு நேரத்தில் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் செல்போன் எண்கள் தெரிவித்தல், அதிகரித்து வரும் சைபர் தொடர்பான இணையவழி குற்றங்களை களையெடுக்க 12 காவல் மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவுகளை உருவாக்கி, குற்றவாளிகளை கண்டறிதல், புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல இயலாத நபர்களுக்காக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களில் புகார் கொடுத்தல், இளைய தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நல்வழிபடுத்த, போதை பொருள் வைத்திருப்போர் மீது Drive Against Drug என்ற அதிரடி தீவிர நடவடிக்கை கொண்டு குற்றவாளிகளை கைது செய்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அழித்தல் என பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு, பொதுமக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.

ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்காக காவல் கரங்கள் துவக்கம்

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் சாலையில் தவித்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை உதவி மையம் மூலம், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ரோட்டரி சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து, ஆதரவற்றோர் முதியோரை மீட்டு உதவிட ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற புதிய திட்டம் தொடங்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இப்பணி நிறைவுற்றது.

அதன்பேரில், சாலையில் தவிக்கும் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு உதவிட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (21.4.2021) எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், ‘‘காவல் கரங்கள்‘‘ திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், உதவி மைய எண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்பு நிறுவனங்கள், அரசு தொண்டு நிறுவனங்கள், முதியோர், பெண்கள், சிறுவர்களுக்கான உதவும் இல்லங்களின் தொடர்பு எண்கள் அடங்கிய காவல் கரங்கள் கையேட்டினையும், காவல் கரங்கள் பற்றிய குறும்படமும், கொரோனாவும் காவல்துறையும் என்ற Youtube குறும்படத்தையும் காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

மேலும், ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களை மீட்டு மருத்துவ உதவி மற்றும் இல்லங்களில் சேர்த்திட வாகன வசதிக்காக ரோட்டரி சங்கத்தினர் பராமரிப்பில் அழைப்புகளுக்கு உதவிட புதிய மீட்பு வாகனத்துடன் முதலுதவி உபகரணங்கள், ஆதரவற்றோர்க்கான அத்தியவாசிய பொருட்கள் உள்ளடங்கியவைகளை காவல் ஆணையாளர் அவர்கள் காவல் கரங்கள் குழுவினருக்கு வழங்கி அதன் சேவையை துவக்கி வைத்தும், 12 தன்னார்வ தொண்டர்களுக்கு சேவை பயன்பாட்டிற்காக 12 எலக்டிரானிக் டேப்லட்களை வழங்கியும் சிறப்புரையாற்றினார். மேலும் சுற்றுக்காவல் ரோந்து வாகனத்தில் பணியிலிருக்கும் காவல் ஆளிநர்கள், பணியிடத்தில் ஓய்வுக்காக அமர நாற்காலிகளை காவல் ஆணையர் அவர்கள் , ரோந்து வாகன காவல் ஆளிநர்களிடம் வழங்கினார்.

சிறப்புரையில், சாலைகளில் உள்ள ஆதரவற்ற முதியோர், பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து சென்னை பெருநகர காவலில் இயங்கி வரும் முதியோர் உதவி மைய எண் 1253, பெண்கள் உதவி மைய எண் 1091, சிறுவர் உதவி மைய எண் 1098 மற்றும் காவல் கட்டுப்பாட்டறை எண். 100 ஆகியவற்றில் வரும் தகவல்கள் காவல் உதவி மையம் மூலம் பெறப்பட்டு ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுத்து கண்டறியப்பட்ட இடத்திற்கு சென்று அவர்களுக்கு உதவிடவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்தும் உறவுகளால் கைவிடப்பட்ட நபர்களை அவர்களது உறவினர்களிடம் சேர்க்கவும், உறவுகள் அல்லாத ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களை அரசு மற்றும் தனியார் தொண்டு இல்லங்களில் சேர்த்து, தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்திடவும் ஏற்பாடு செய்யப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.

15.3.2021 முதல் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற இந்த சேவையினால் 138 ஆதரவற்றோர் மீட்கப்பட்டு உரிய உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

காவல் கரங்கள் திட்டக் குழுவில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், அரசு மற்றும் அரசு சாரா தொண்டு அமைப்பினர், அரசு மற்றும் தனியார் தொண்டு இல்லங்களின் நிர்வாகிகள் காவல் கட்டுப்பாட்டறை உதவி மையம் மூலம் அவசர அழைப்பு எண்கள் 1091, 1098, 1253 மற்றும் 100 அழைப்புகளுக்கு ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டோர் மற்றும் ஆதரவற்றோரை மீட்டிடவும், அவர்களுக்கு உதவிடவும் மனமுவந்து தங்களது ஆதரவு கரங்களை கொடுத்து உதவிடுவர் என தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொடர்பு உதவி ஆணையாளர் திரு.எம்.எஸ்.பாஸ்கர் காவல் கரங்கள் சேவையை துவக்கி வைத்த காவல் ஆணையாளர் அவர்களுக்கு நன்றி கூறி, இந்த காவல் கரங்கள் சேவைக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப, (கிழக்கு மண்டலம்) திருமதி.S.மல்லிகா, இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திரு.P.சாமிநாதன், இ.கா.ப., (காவல் கட்டுப்பாட்டு அறை), திரு.P.பகலவன், இ.கா.ப (திருவல்லிக்கேணி) நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி.S.விமலா, திரு.K.ஶ்ரீதர்பாபு, ஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.K.சௌந்தராஜன், ரோட்டரி சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *