பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாட்சி சம்பவத்தை மிஞ்சும் வகையில், தேனியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதிகள், நேற்று முன்தினம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்தனர். அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அம்மனுவில், “எனது கணவர் வேலை காரணமாகக் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம், கேரள மாநிலம் கொல்லத்திற்குச் சென்றார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் போட்டுவிடுவதாகக் கூறினார். அதற்காக, சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கச் சொன்னார். அதன்படி வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கினேன். அப்போது, வங்கி ஊழியர் முத்துசிவகார்த்திக் என்பவர், ‘ஏ.டி.எம் கார்டு வந்ததும் அழைக்கிறேன். உங்கள் நம்பரைக் கொடுங்கள்’ என்றார். எனது நம்பரைக் கொடுத்தேன். பின்னர், என்னைப் போனில் தொடர்புகொண்ட அவர், ‘பி.காம் படித்திருக்கும் உனக்கு எங்களது வங்கியில் தற்காலிக வேலை இருக்கிறது’ என்றும், அதனை வாங்கிக்கொடுப்பதாகவும் கூறினார். பின்னர், வேலை சம்பந்தமாக வங்கியின் உயர் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி, கம்பத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றுக்கு வரச்சொன்னார். என் குடும்பச் சூழல் காரணமாக எப்படியாவது இந்த வேலை கிடைத்தால் போதும் எனக் கருதி அங்கு சென்றேன். அறைக்குள் சென்றதும் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்தார். அதைத் தனது செல்போனில் காணொளியாகப் பதிவுசெய்துகொண்டார். தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த வீடியோவை எனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி என்னை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்புணர்வுசெய்தார். ஒரு கட்டத்தில், அவருடன் வங்கியில் பணிபுரியும் அன்பு, பாண்டி, சதீஸ் மற்றும் பெயர் தெரியாத மூவருக்கு அனுப்பி, அந்த ஆறு பேரை அழைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்து, என்னைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார்கள். என்னை விட்டுவிடுங்கள் எனப் பல முறை கெஞ்சியும் பார்த்தேன்.

ஆனால், நான் சொல்வதை காதில் வாங்காமல், முத்துசிவகார்த்தியின் நண்பன் ராஜபார்த்திபன் மற்றும் வங்கி ஊழியர்கள் இருவர் உட்பட, மூவர் என்னை தேக்கடி உட்பட பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர். அப்போதெல்லாம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதனை என் கணவரிடமோ, பெற்றோரிடமோ சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டினார்கள். இவர்களிடம் இருந்து தப்பிக்க போடி சிலமலையைச் சேர்ந்த எனது உறவினரான போஸ் என்பவரது மகன் ஈஸ்வரனிடம் நடந்த விசயம் அனைத்தையும் கூறினேன். எனக்கு உதவி செய்வதைப் போல நடித்து, அவனும் என்னை பாலியல் வன்புணர்வு செய்தான். அதோடு, பெயர் தெரியாத அவனது நண்பனை அழைத்துவந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்து அதை செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துகொண்டான்.

கடந்த 2018 ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை 12 பேரும் என்னை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் என் உடல் நிலை மோசமாகச் சென்றது. அதனை அறிந்த என் கணவர், எனது மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளைப் பார்த்து என்னுடன் சண்டைபோட்டார். அதன்பின்னர் நடந்ததைக் கூறினேன். என்னை பாலியல் வன்புணர்வு செய்த 12 பேர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக அப்பெண் கூறும்போது, “ 2018 டிசம்பர் மாதம் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. அதன் பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் இப்போது எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். 12 பேருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த துணை மேலாளரான போடியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக் (30), சிலமலையைச் சேர்ந்த ஈஸ்வரன் (30) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். பெயர் தெரியாத சிலரை சந்தேகத்தின் பெயரில் அழைத்துவந்து அப்பெண்ணிடம் அடையாளம் காட்டச் சொல்லி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை!

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *