திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்_

 

 

திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்_

திருப்பூரை அடுத்த முருகம்பாளையம் பகுதியில் புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உள்பட்ட முருகம்பாளையம் பகுதியில் ஏற்கெனவே 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில், அதே பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

 

இந்தப் பகுதியில் அதிக அளவிலான பள்ளிகள், கோயில்கள் உள்ளதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே மனு அளித்திருந்தனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் முருகம்பாளையம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

இதனிடையே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வராததால் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சுந்தரம், வீரபாண்டி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இரு நாள்களில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related posts

Leave a Comment