பழமை பொருட்களில் புதுமை படைக்கும் ஜாய்சேகர்

பழமை பொருட்களில்
புதுமை படைக்கும் ஜாய்சேகர்

ஜாய் சேகர் சமூக சேவையில் என்ஜாய் சேகராக இருப்பவர் . ஆம் சமூக சேவையை அனுபவித்து செய்யக்கூடியவர் தான் ஜாய்சேகர்.

கேரளா பாலக்காடு மாவட்டம் தான் இவரது பூர்வீகம் என்றாலும் கோவையில் தான் படித்தது வளர்ந்தது எல்லாம். கோவை மாநகரில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் உயர் கல்வி பயின்ற ஜாய்சேகர் வருமான வரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதலே கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். டென்னிஸ் கோல்ப் ஸ்நூக்கர் போன்ற உயர்தர விளையாட்டிலும் உயரம் எட்டியவர். சிறுவயது முதல் பழமையான பொருட்களின் மீது ஆர்வம் கொண்ட ஜாய் சேகர் தொல்பொருள் ஆர்வலர்கள் மேற்கொள்ளும் பணிகளை போல் இவரும் பல்வேறு முயற்சிகளை கொண்டதன் விளைவாக தொன்மை பொருள் பாதுகாவலர் விருதினைப் பெற்றார்.

அதேசமயம் நூற்றாண்டுக்கும் மேலான பழமையான 14 கார்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். இந்த கார்கள் அந்த காலகட்டத்தினை பிரதிபலிக்கும் சான்றாய் சரித்திரமாய் அந்த காலகட்டத்தின் கலாச்சாரமாக விளங்கி வருகின்றது. இப்படித் தொன்மையான பொருட்களை சேகரித்து வருவதன் மூலம் நேற்றைய வாழ்வியல் வழிமுறைகளை நாளைய தலைமுறைக்கு கடத்தி கொண்டு போகக்கூடிய வரலாற்றை விற்பனராய் மாறிவருகிறார் என்றால் அது மிகையல்ல.

இவரின் தொன்மையான பட்டியலில் கார்கள் மட்டுமல்ல பழங்கால பைக்குகள், ஜெர்மன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட 350க்கும் மேற்பட்ட கடிகாரங்கள். இவற்றில் பல கடிகாரங்கள் தங்கம், மற்றும் பிளாட்டினத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பழங்கால ருத்ராட்சங்கள், சந்தனம், பொற்சிலைகள், பழமையான கடவுள் சிலைகள், எழுதுகோல்கள், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பித்தளையால் செய்யப்பட்ட தொலைநோக்கிகள், மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட கேமராக்கள் என இவரின் பழமையான பொருட்களின் பட்டியல் நீளமானது, நிஜமானது, நினைவை விட்டு அகல மறுக்கக்கூடியது.

மேலும் பழைய வேட்டைத் துப்பாக்கிகள் பிரிட்டிஷ் கால துப்பாக்கிகள் என தொன்மையான இவரின் பட்டியலில் வியப்பால் விரிந்து கிடக்கின்றது.

இத்தகைய தொன்மையான பொருட்கள் இவர் பள்ளி கல்லூரிகளில் காட்சிப்படுத்தும் போது அது காணக்கிடைக்காத காட்சியாய்…. மாட்சியாய் நமது முன்னோர்களின் பெருமைகளின் சாட்சியாய் மாணவர்களுக்கு சரித்திரத்தை கண்முன்னே நிறுத்துவதை இவரின் தொன்மை கண்காட்சி செய்துவரும் அளப்பரிய சாதனை ஆகும்.

அதேசமயம் ஜாய்சேகர் வருமான வரித்துறை அதிகாரியாக நேர்மை துணிவுடனும், யாருக்கும் வளையாத உணர்வோடும் தேர்தல் நேரங்களில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் திடமுடன் இருந்து, உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சாது, முறைகேடாக பணம் எங்கிருந்து வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாது, நியாயமாக தேர்தலை நடத்தவேண்டும் என்கிற இவரின் ஜனநாயக கடமை வியக்கத்தக்கது, போற்றுதலுக்கும் உரியது. ஒரு பக்கம் கல்வியில் சிறந்தவர், விளையாட்டில் தேர்ந்தவர், இன்னொரு பக்கம் தொன்மை பொருட்களின் காதலர், வருமான வரித்துறையில் மிடுக்கான அதிகாரி.

இதையெல்லாம் தாண்டி சமூக சேவகர், அரிமா ரோட்டரி சங்கங்கள் ஈடுபாட்டாளர்…

மேலும் ரோட்டரி சங்கங்களின் கவுரவ உறுப்பினர் என்ற பெருமை.

இவற்றையெல்லாம் உணர்கின்றோர் ஜாய் சேகரின் அரிய செயல்களுக்கு பாராட்டும் முகமாக பல்வேறு விருதுகள், இவரின் தொன்மை பற்றி போட்டியாக…

ஆம்… சேவா ரத்னா விருது எனத் துவங்கி இவர் வாங்கி வைத்திருக்கும் விருதுகள் எண்ணிலடங்காதது.

வாழ்ந்தோம்… மறைந்தோம்….. என்பது வாழ்வல்ல… வாழ்ந்தோம் ….மறையாத
புகழோடு வாழ்ந்து மறைந்தோம் என்பதே வாழ்வின் அர்த்தமாகும் அத்தகைய அர்த்தத்தை அழுதத்தோடு பதிவு செய்து வரும் ஜாய்சேகர் பன்முகத்தன்மை கொண்ட என்ஜாய் சேகர் தானே…

Related posts

Leave a Comment