விருதுநகர்:ஆர்.ஆர்.நகர் அருகே 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த இசை கலைஞர்களின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.நகருக்கும் பட்டம்புதுாருக்கும் இடையே ரோட்டின் அருகே இந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறுகையில், நடுகல் என்பது பழங்காலத்தில் இறந்தவர் நினைவாக நடப்படும் நினைவுக்கல் என சங்க கால பாடல்கள் தெரிவிக்கின்றன. இங்கு 2 இசை கலைஞர்களின் நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்கள் கைகூப்பியவாறு நின்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடுப்பில் உருமி, முரசு போன்ற இசைக்கருவிகளை இசைப்பதற்கு ஏற்றவாறு அணிந்துள்ளனர். இவர்கள் தண்டோரா போடுபவர்களை போல் காட்சி அளிக்கின்றனர். அதோடு முழங்கால் வரை ஆடை அலங்காரம் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இருவரின் தலையலங்காரம், பக்கவாட்டு கொண்டை, நீண்ட துளை உள்ள காதணிகள் தோள்பட்டையை தொட்டவாறு செதுக்கப்பட்டுள்ளன. 4 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வேலைப்பாடுகளை பார்த்தால் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால சிற்பம் என கருத முடிகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கற்சிலை விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.