பழனி… முருகனின் திருத்தலம் மட்டும் அல்ல… கொள்ளையர்களின் திருட்டுத்தனம் அதிகம் உள்ள இடமும் அதுதான்.

ரோப்கார் பகுதியில் புரோக்கர் தொல்லை அது பற்றி ஒருவர் நுகர்வோர் மையத்துக்கு கொடுத்த புகார் பதிவு

வாசலிலேயே தலைக்கு நூறு ரூபாய் விஐபி தரிசனம் என சிலர் கூவிட்டு இருந்தாங்க. ரோப்கார் டிக்கட் வாங்க வரிசையில் நின்னா ஒரு மணிநேரம் ஆகும், எங்ககிட்ட பணம் கொடுத்த உடனே கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க.

ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு உள்ளே கூண்டுகளுக்குள் வரிசையில் போய் நின்றுகொண்டோம். உள்ளே எந்த இடத்தில் டிக்கட் கொடுப்பார்கள், எப்பொழுது கொடுப்பார்கள் என்றே தெரியாத அளவுக்கு சுவர் போல எல்லாமுமே அடைக்கப்பட்டு இருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துவிட்டு நான் மட்டும் வெளியே வந்தேன்.

வெளியே பாதுகாவலர் போல கேட் அருகில் நின்ற நபரை கேட்டேன். எப்ப நீக்குவாங்கனு தெரியாதுங்க, லேட்டுதான் ஆகும், போய் வரிசையிலேயே நில்லுங்க அப்படின்னு சொன்னாப்ல.

அந்த பிளாக் டிக்கட் பேர்வழி மறுபடியும் என்னை கூப்பிட்டு அதுதான் சொன்னேனே… வரிசையில் நின்னா டிக்கட் கிடைக்கவே ஒரு மணி நேரம் ஆகும், பேசாம எங்கிட்ட டிக்கட் வாங்கிட்டு போங்க.. உடனே ரோப்காரில் போகலாம்னு சொன்னான்.

சரி, எவ்வளவுன்னு கேட்டேன்… நான்கு பேருக்கு போகவர தலைக்கு இருநூறு, விஐபி தரிசனத்திற்கு தலைக்கு 250 ன்னு சொன்னாப்ல. உடனே நேராக போலாம்னு சொன்னாப்ல. ரோப்காருக்கு மட்டும் தனியாக டிக்கட் தரமாட்டாங்களாம். மொத்தமாக பேக்கேஜ் டிக்கட் (போகவர ரோப்கார் கட்டணம் + விஐபி தரிசனம்) எடுத்தாதான் போக முடியுமாம்.

கையில் ஒரு துண்டு சீட்டுதான் வச்சு இருக்காப்ல. அதுல கிறுக்கி கொடுத்தா அதுதான் விஐபி சீட்டாம். கணக்கு போட்டு பார்த்தேன். நான்கு பேருக்கு 1800. நமக்கு இது ஒத்துவராதுன்னு பழையபடி வரிசைக்கு போனேன்.

பார்த்தால் அடுத்த நிமிடத்தில் அங்கு இருந்த தகரம் நீக்கப்பட்டு டிக்கட் கவுண்டர் தெரிந்தது. அங்கு அது இருப்பது தெரியாமல் தகரம் போட்டு மறைக்கப்பட்டு உள்ளது. போய் 50ரூபாய் டிக்கட் வாங்கிட்டு உள்ளே போனோம். (இதிலே 15 ரூபாய் டிக்கட் வாங்கினால் பயங்கர தாமதம் ஆகுமாம்). அளவா கொஞ்சம் பேருக்கு டிக்கட் கொடுத்துட்டு மறுபடியும் மூடிட்டு போயிட்டாங்க.

ஒரு முறைக்கு நான்கு பெட்டிகள், அதில் தலா நான்கு பேர் என்ற வகையில் பதினாறு பேர் போகலாம். வரிசையில் நின்று வருபவர்கள் பகுதி பேர், பிளாக் டிக்கட் வாங்கிகொண்டு வெளியேறும் வழியில் உள்ளே வருபவர்களில் பாதி பேர் என ரோப்காரில் அனுப்பி வைத்துக்கொண்டு இருந்தார்கள்.

மேலே டிக்கட் எடுக்கும் இடத்தில் இருந்து தரிசனம் செய்யும் இடம் வரை எல்லாமுமே பிளாக்டிக்கட் பேர்வழிகளின் ஆதிக்கம்தான். அவர்களிடம் பணம் கொடுத்தால் நேராக சாமி முன்பாகவே நிறுத்தி விடுகின்றனர்.

நாங்கள் நூறு ரூபாய் டிக்கட் எடுத்துகொண்டு உள்ளே போக அபிசேகம் ஆரம்பித்துவிட்டது என கூறி ஒரு மணிநேரம் வெளியே நிற்க வைத்துவிட்டார்கள். ஆனால் வேறுவழிகளில் சரமாரியாக நிறைய நபர்கள் உள்ளே போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.

எல்லா இடங்களிலும் பணம் பணம் பணம்தான். சாமி முன்பாக கொஞ்ச நேரம் நிற்க வைக்க, விபூதி கொடுக்க, சிறப்பு பிரசாதம் கொடுக்க என ஏதாவது சொல்லி நூற்றுக்கணக்கில் பணம் வாங்குகின்றார்கள். ஆனால் எதையும் ஒளித்து மறைத்து பயந்துகொண்டு செய்வதில்லை. உரிமையுடன் அதிகாரமாக வாங்குகின்றார்கள்.

ஒருவழியாக தரிசனம் முடிந்து கீழே இறங்க ரோப்கார் நிற்க்குமிடம் வந்தோம். அங்கேயும் பிளாக்டிக்கட் பேர்வழிகள் கூவிட்டுதான் இருந்தாங்க. கீழே இருப்பது போலவே இங்கும் டிக்கட் கவுண்டர்களை மூடித்தான் வைத்து இருக்கின்றனர். எனவே இதைபார்த்து டிக்கட் கிடைக்க ரொம்ப நேரமாகும்னு பயந்து போய் நிறைய பேர் பிளாக்டிக்கட் பேர்வழிகளிடம் அதிக பணம் கொடுத்து ஏமாறுகின்றனர்.

நாங்க வரிசையில் போய் நிற்க பத்து நிமிடம் கழித்து டிக்கட் கவுண்டர்களை திறந்தார்கள். அளவா டிக்கட் கொடுத்துட்டு மூடிட்டு வெளியே போயிட்டாங்க.

இந்த பிளாக்டிக்கட் பேர்வழிகள் ஒன்றும் ரகசியமாக செயல்படுவது இல்லை. பகிங்கரமாகவே நின்றுகொண்டு சத்தம் போட்டு அழைக்கின்றார்கள். அவர்கள் சைகை செய்தால் ஆங்காங்கே அடைக்கப்பட்டு உள்ள கதவுகள் அருகில் நிற்கும் நபர்கள் எல்லாம் கதவை திறந்து வழிவிடுகின்றனர்.

எனது கேள்விகள்… எதற்க்காக ரோப்கார் டிக்கட் கொடுக்கும் கவுண்டர்களை அடிக்கடி மூடிவைத்து பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றனர்? ஏன் தொடர்ச்சியாக டிக்கட் தருவது இல்லை? கூட்டம் நிறைய இருந்தாலும் டிக்கட் கவுண்டர்கள் திறந்து இருந்தால், டிக்கட் உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரிசையில் பொறுமையுடன் காத்து இருந்து வாங்கி செல்வார்கள்.

ஆனால் பிளாக் டிக்கட் பேர்வழிக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதற்காகவே அடிக்கடி டிக்கட் கவுண்டர்களை மூடி வைத்து பக்தர்களிடம் அச்சத்தை உண்டாக்குகின்றனர்.

இந்த லட்சணத்திற்கு அடிக்கடி யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள், யாராவது பணம் கேட்டால் உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுக்கலாம் என ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் செய்து கொண்டு உள்ளனர்.

நிர்வாகம் கண்டிப்புடன் ஒழுங்காக இருந்தால் இப்படி குறுக்கு வழிகளில் இஷ்டம்போல எல்லோரும் வந்து செல்ல முடியுமா? பிளாக்டிக்கட் பேர்வழிகள் பகிங்கரமாக கூவி கூவி ஏலம் போடமுடியுமா?
எல்லோரும் ஒன்று சேர்ந்து ஊழல் செய்வது வெளிப்படையாக தெரிகின்றது. அப்படி இருக்கையில் அவர்களிடமே சென்று புகார் செய்ய பைத்தியமா பிடித்து உள்ளது?

எத்தனை மணிக்கு என்ன பூஜை உள்ளது? அதற்கு எவ்வளவு கட்டணம்? தரிசன டிக்கட்கள் கொடுக்கும் இடம் எங்குள்ளது எனபதை ரோப்கார், வின்ச், நிற்கும் இடங்களில், பக்தர்கள் படியேறி வரும் இடங்களில் தெளிவாக அறிவிப்புகள் வைக்காமல் பிளாக்டிக்கட் பேர்வழிகள் பக்தர்களை ஏமாற்றி கொள்ளையடிக்க உதவுகின்றார்கள்.

எனவே பழனிக்கு செல்பவர்கள் யாரிடமும் பணம் கொடுக்கவேண்டாம். உடல் வலு இருப்பவர்கள் படி ஏறி செல்லுங்கள். முடியாதவர்கள் வரிசையில் பொறுமையாக நின்று ரோப்கார், வின்ச் போன்றவற்றில் ஏறி செல்லலாம். தனியாக சிறப்பு தரிசனம், சிறப்பு பிரசாதம் என யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம். இங்கு பொறுமை முக்கியம், பொறுமை இல்லையெனில் ஆயிரக்கணக்கில் பணம் பறிபோய்விடும்.

முடிந்த அளவு பொது தரிசன வழிகளில் செல்வது நல்லது. காரணம் இதில் செல்பவர்கள் மட்டுமே தூரத்தில் இருந்தே முருகனை கண்குளிர தரிசித்து வரமுடியும்.
மொட்டை அடிக்கும் இடத்தில் டிக்கட் கட்டணம் போக நாவிதருக்கு,தனியாக 100-00 ரூபாய் கட்டாயப்படுத்தி வாங்குகுறார்கள்!!!

தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைப்பதில்லை!! என்ன ரகசியமோ???

எப்பொழுது வெளிப்படைத்தன்மையாக மாறுமோ??

சிவன் சொத்து குல நாசம் என்றால்,
சிவன் மகன் முருகன் சொத்தை தின்பவர்கள் ஏழேழு ஜென்ம பரம்பரை ,வாழையடி வாழையாக நாசமாகுமா?

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட

திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *