சென்னையில் அவிழ்த்து விட்ட காளைகள் போல வீதியில் அனாவசியமாக சுற்றித்திரிந்த தம்பிகளை மடக்கிய போலீசார் அவர்களை, ஒற்றைக்காலில் நிற்க வைத்தும், மூச்சிரைக்க ஓட வைத்தும் நெம்பி எடுத்தனர்.

ஒற்றைக்காலில் நின்றால் கொரோனா வராதா? என்ற கேள்விக்கு போலீசார் அளித்த வினோத பதில் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் தமிழகத்தில் இருசக்கர வாகனத்திலும், கூட்டாளிகளுடனும் காலநேரமின்றி அவிழ்த்து விட்ட காளைகள் போல சுற்றித்திரிந்த தம்பிகளை விசித்திரமான தண்டனை வழங்கி போலீசார் நெம்பி எடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே சிக்கிய 3 ஊர்சுற்றிகளை தவளை போல தாவிச்சென்று தூரத்தில் நிற்கும் லாரியைத் தொடும் தண்டனை வழங்கப்பட்டது.

சென்னை, திருவொற்றியூரில் சிக்கிய தம்பிகளை ஒற்றை காலில் நிற்க வைத்து நூதன வைத்தியம் செய்த காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா நோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

அப்போது ஒற்றைக்கால் தவம் செய்த தம்பி ஒருவர், சார், ஒத்தக் காலில் நின்றால் கொரோனா வராதா ? என்று முணுமுணுக்க, பதிலுக்கு போலீசாரும் நிச்சயம் கொரோனா வராது, ஆனால் கால் வலி வரும் அதனால் வீட்டிலேயே இரு..! என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதே போல பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடி பகுதியில் வீதியில் வீணாக சுற்றியதால் காவல்துறையினரிடம் சிக்கிய தம்பிகளின் இரு சக்கர வாகன சாவிகள் பறிபோயின.

அவர்களை, கொளுத்தும் வெயிலில் சிறிது தூரம் ஓடிவிட்டு வந்து சாவியை வாங்கிச்செல்ல அறிவுறுத்தினர்.

மூச்சிரைக்க ஓடித் திரும்பிய தம்பிகள் இனி வெளியே வர மாட்டோம் என்று வாகனத்துடன் ஓட்டம் எடுத்தனர்

கொடுங்கையூரில் வெட்டியாக வேலையின்றி ஊர் சுற்றிய நபர்களை பிடித்து இனிமேல் ஊர்சுற்ற மாட்டோம் என்று கோரஸ் மத்திரத்துடன் தோப்புக்கரணமும் போட வைத்தனர் காவல்துறையினர் செங்குன்றம் போலீசார் சற்று வித்தியாசமாக சாலையில் சுற்றிய நபர்களை, அப்படியே பிச்சைக்காரர்கள் போல சாலையில் அமரவைத்தனர்.

கையில் திருவோட்டுக்கு பதில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்த வைத்தனர்.

சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக, அமரவைக்கப்பட்ட அந்த ஊர்சுற்றிகளின் புத்திக்கு உரைக்கும் வகையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கையில் தடியை எடுக்காமல் காவல்துறையினர் வள்ளல் போல அள்ளிக்கொடுக்கும் புதிய புதிய தண்டனைகள் மாமன்னர் 23 ஆம் புலிகேசியையே மிஞ்சும் ரகம் என்றாலும், சில்லரை மளிகை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்துவர உரிய நேரத்தை காவல்துறையினர் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.