குழந்தைபருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வை உருவாக்க மோட்டார்சைக்கிள் ரேலி!
புற்றுநோயிலிருந்து விடுதலை – நிவாரணம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையும், சவீதா மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்தின
சென்னை, 15 பிப்ரவரி 2020: உலக குழந்தைப்பருவ புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15ம் தேதி உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இத்தருணத்தில் உலகளவில் குழந்தைப்பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வை உருவாக்க சென்னையில், 100-க்கும் அதிகமான பைக் ஓட்டுனர்கள் பங்கேற்ற ஒரு பைக் ரேலி நடைபெற்றது. புற்றுநோயிலிருந்து விடுதலை – நிவாரணம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையானது, சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையோடு இணைந்து இந்த ரேலி நிகழ்வை நடத்தின. டாக்டர். எம்ஜிஆர் பள்ளியின் முதல்வர் திருமதி லயனஸ் கீதா மது மோகன் இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூரிலிருந்து தொடங்கிய இந்த ரேலி, நாவலூர் சந்திப்பில் நிறைவடைந்தது. புற்றுநோய் மீதான விழிப்புணர்வை உருவாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய உற்சாகமிக்க பெண்கள் மற்றும் ஆண்கள் என்ற இரு பாலின பைக் ஓட்டுனர்கள் இந்த மோட்டார்சைக்கிள் ரேலியில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந்த நிகழ்விலிருந்து திரட்டப்பட்ட நிதியானது புற்றுநோயாளிகளுக்கு மருந்துகளை வாங்குவதற்காக பயன்படுத்தப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர “Conquer 2020” என்பதன் முன்னோட்ட நிகழ்வாக இந்த பைக் ரேலி நடத்தப்பட்டது.
புற்றுநோயிலிருந்து விடுதலை – நிவாரணம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான டாக்டர். அனிதா ரமேஷ், இந்த பைக் ரேலியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த குழந்தைகளிலிருந்து 19 ஆண்டுகள் வயதுக்குட்பட்ட 300,000 க்கும் அதிகமான சிறார்களுக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுகிறது. இந்த சிறார்களுள் 10 நபர்களில் ஏறக்குறைய 8 நபர்கள் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் புற்றுநோயிலிருந்து குணமாகி உயிர்பிழைக்கும் விகிதாச்சாரம் ஏறக்குறைய 20%ஆக பெரும்பாலும் இருக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப்போரிடுகிற சிறார்களின் வலியையும், துயரையும் அகற்றுவதும் மற்றும் 2030ம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அவர்கள் உயிர்பிழைக்கும் விகிதத்தை குறைந்தபட்சம் 60%-க்கு உயர்த்துவதும் உலக சுகாதார நிறுவனத்தின் குழந்தைப்பருவ புற்றுநோய் முனைப்பு திட்டத்தின் இலக்காக இருக்கிறது. அதாவது, தற்போதுள்ள குணமடையும் விகிதாச்சாரத்தை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இதன்மூலம், அடுத்த 10 ஆண்டில் கூடுதலாக 1 மில்லியன் குழந்தைகளின் உயிரை இதன் மூலம் காப்பாற்ற வேண்டும்,” என்று கூறினார்.