சென்னை புத்தகக் காட்சியில் கீழடி அகழாய்வுக் காட்சி கூடம்… வாசகர்கள் வரவேற்பு
சென்னை புத்தகக் காட்சியில் வைகை நதிக்கரையின் சங்க கால நாகரிகத்தை அறிய கீழடி தொல் பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் இந்த அரங்கு புத்தகக் காட்சி வருபவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் 43வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. 750க்கும் அதிகமான அரங்குகளுடன் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பிடித்துள்ளன. புத்தக பிரியர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கும் இந்த கண்காட்சியில்தான் வைகை நதிக்கரையின் சங்க கால நாகரிகத்தை மார்தட்டி சொல்லும் பொருட்டு தொல்லியல் துறை சார்பில் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு தொல்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டும் செயற்கை மாதிரிகளாலும் கீழடியில் அகழாய்வு செய்யப்பட இடம் போன்றே தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த அரங்கு. திமில் உள்ள காளைகளின் எழும்புத்துண்டுகள், 2600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய செங்கற்கள், மண்பாண்டங்களில் தமிழ் – பிராமி எழுத்துக்களால் ஆன கீறல்கள், மணி வகைகள், வட்டசில்லுகள் என அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்ணாடிப் பேழைக்குள் மக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தபட்டுள்ளன.
இந்த அரங்கில் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் காட்சிக் கூடம், நம்மை கீழடிக்கே அழைத்து சென்று அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு தொட்டுணர்வது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. மெய்நிகர் காட்சிக்கூடத்திற்குள் நுழையும் மக்கள் விர்ட்சுவல் ரியாலிட்டி கருவியை பொருத்திகொண்டு தங்களை மறந்து குழிக்குள் பயணிக்க தொடங்கிவிடுகின்றனர்.
இதுமட்டும் இல்லாமல் தமிழ் மொழியின் பழமையை உலகெங்கும் வெளிச்சம்போட்டு காட்டும் பொருட்டு அகழாய்வு தொடர்பான புத்தகத்தை தமிழ் மட்டுமின்றி, நேபாளம், ஆங்கிலம், கண்னடம், தெலுங்கு என 24 மொழிகளில் விற்பனை செய்கிறது தொல்லியல் துறை.