சுந்தராபுரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமிரா
மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண் துவக்கி வைத்தார்
கோவை, ஜூலை 25-
கோவை சுந்தராபுரத்தில் மாநகர போலீஸின் மூன்றாம் கண் திட்டத்தில் பொருத்தப்பட்ட 120 கண்காணிப்பு கேமிராக்களின் கட்டுப்பாட்டு அறையினை மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண் திறந்து வைத்தார்.
கோவை சுந்தராபுரத்தில் வணிகர்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் 120 கண்காணிப்பு கேமிராக்கள், கோவை, பொள்ளாச்சி, மதுக்கரை, போத்தனூர் ஆகிய சாலைகளில் பொருத்தப்பட்டு, அதன் துவக்க விழா நிகழ்ச்சி, சாரதா மில் சாலையில் நடைபெற்றது.
இதில், மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண் தலைமையில் அனைத்து கேமிராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது. முன்னதாக அவர் கேமிராக்கள் கண்காணிக்கும் புறநகர் காவல்நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், கமிஷ்னர் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இணையதளம் மூலமும் இணைக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக ஐடி கொடுக்கப்பட்டது.
விழாவில், கமிஷ்னர் சுமித்சரண் பேசுகையில், கோவை நகரம், தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. தினமும் நகர் முழுவதும் நடைபெறும் குற்ற சம்பவங்களை போலீசாரால் கவனிக்க முடியாத நேரத்தில், இந்த கண்காணிப்பு கேமிராக்கள் கைகொடுக்கும்.
உதாரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ரத்தினபுரியில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த குற்றவாளிகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உடனடியாக கண்டுபிடித்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 120 கேமிராக்களை பொருத்திய போத்தனூர் போலீசாருக்கும், வணிகர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.
முன்னதாக கண்காணிப்பு கேமிராவின் நன்மைகளையும், எவ்வாறு காவல்துறைக்கு உதவிகரமாக உள்ளது என்பது குறித்தும் மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் பாலாஜி சரவணன் மற்றும் பெருமாள் ஆகியோர் பேசினர். கேமிராக்களின் தன்மை, செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், உதவி கமிஷ்னர் செட்ரிக் இம்மானுவேல் எடுத்துரைத்தார். இறுதியில், போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைப் பாளரும், மக்கள் சட்ட உரிமை கழக துணை பொது செயலாளர் செல்வராஜ், அன்னபூர்ணா ஓட்டல் இயக்குனர் சீனிவாசன், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வெங்கட்சுப்பிரமணியம், மண்டல தலைவர் ஸ்ரீனிவாச கிரி, மாவட்ட பொருளாளர் முத்துவேல், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகர், ஹில்சிட்டி தலைவர் நித்திஸ் குட்டன், செயலாளர் ஸ்ரீதர், பிம்ஸ் மருத்துவமனை அதிகாரி முருகதாஸ், அபிராமி மருத்துவமனை தலைவர் பெரியசாமி, ஆனந்தாஸ் ஓட்டல் இயக்குனர் வெங்கடேஷ், மணி, எம்டிஎஸ் குரூப் முருகன், விமலா ஸ்டோர் ராஜரத்தினம், வணக்கம் தமிழகம் செல்வநிதி, சிசிடிவி தொழில்நுட்ப உதவியாளர் வெங்கட், சங்கமம் வீதி மனோகரன், செட்டிநாடு ஓட்டல் ராகவன், கொசிமா சங்க தலைவர் சுருளிவேல், செயலாளர் நடராஜன், பொருளாளர் லோகநாதன், முன்னாள் தலைவர் லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.