கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் கொடைக்கானல் போட் கிளப்பில் 16 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நேற்றும் 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. பகல் 12.30 மணியளவில் துவங்கிய சாரல் மழை பின்னர் வலுவடைந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலின் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணை மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.