உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பின் தலைமைப்பண்பு விருதை 2023 – இந்தியா வென்றுள்ளது
இந்திய தொலைத்தொடர்புத்துறை விடியலைத் தரும் துறையாக உருவாகி வரும் நிலையில், உலகமே உற்று நோக்கி வருகிறது- திரு அஸ்வினி வைஷ்ணவ்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பின் சார்பாக தொலைத்தொடர்புத் துறையில் சிறந்த நடைமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் செயலாக்கம் செய்ததற்காக தலைமைப்பண்பு விருதை 2023 – இந்தியா வென்றுள்ளது.
விருது பெறவிருப்பதை தெரிவித்த மத்திய தொலைத்தொடர்பு மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வேத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், “உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பின் சார்பாக வழங்கப்படும் விருது தொலைத்தொடர்பு துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டுவந்த சிறந்த சீர்திருத்தங்களுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் ஆகும். சீர்திருத்தங்களின் விளைவுகளை நாம் அனைவரும் உணர்கிறோம்.
தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அனுமதிகள் வாங்குவதற்கு 230 நாட்கள் என்றிருந்த நிலையில், 8 நாட்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. 85 சதவீதத்திற்கும் மேலாக மொபைல் டவர் அமைப்பது தொடர்பான அனுமதிகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. 387 மாவட்டங்களில் 1 லட்சம் இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 5ஜி சேவைகள் உலகில் வேகமாக சென்றடையும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்திய தொலைத்தொடர்புத்துறை விடியலைத் தரும் துறையாக உருவாகி வரும் நிலையில், உலகமே உற்றுநோக்கி வருகிறது-
உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பானது 750 மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களையும், அதனோடு தொடர்புடைய 400 நிறுவனங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. பார்சிலோனாவில் 2023 பிப்ரவரி 27 அன்று உலக மொபைல் கூட்டமைப்பில் நடைபெற்ற விழாவில் இந்தியாவிற்கு இந்த விருது கிடைத்தது அறிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் மத்திய அரசு கடந்த செப்டம்பர் 2021-ம் ஆண்டு அமைப்பு ரீதியிலான, நடைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக உரிமம் வழங்குவதில் சீர்திருத்த நடவடிக்கைகள், பிரதமரின் கதிசக்தி (தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்) வலைதளம் உருவாக்கல், மொபைல் டவர் அமைப்பது தொடர்பான அனுமதிகளை ஒழுங்கு முறைப்படுத்துதல், அலைக்கற்றை ஒதுக்கீடு, செயற்கைக்கோள் சீர்திருத்தங்கள் போன்றவைகள் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளன.