பொங்கல் பண்டிகையையொட்டி கோவை மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு குவிந்துள்ள கரும்பு கட்டுகள்
பொங்கல் என்றாலே நம் மனதில் முதலில் நினைவுக்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். அந்த வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கரும்புகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் எதிர்பார்த்தது போல் நடைபெறுமா என்ற கலக்கத்தில் கரும்பு வியாபாரிகள் உள்ளனர். இதுகுறித்து தியாகி குமரன் மார்க்கெட்டில் கரும்பு வியாபாரம் செய்துவரும் வியாபாரி பாக்கியராஜ் கூறியதாவது:-
‘‘நான் கோவை வேடபட்டியில் இருந்து வருகிறேன். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு கோவை மார்க்கெட்டில் கரும்பு கடை போட்டு வியாபாரம் நடத்துவோம். கொரோனா காரணமாக வியாபாரம் சரிவர நடைபெறுமா? என அச்சமாக தான் உள்ளது. கடந்த வருடம் இன்றைய தினத்தில் 10 லாரியில் விற்பனைக்கு கரும்புகள் கொண்டு வந்தோம்.
இந்த வருடம் ஒரு லாரியில் 6 டன் கரும்புக்கு மட்டுமே எடுத்து வந்துள்ளோம். இந்த வருடம் பருவமழை காரணமாகவும், அதிகமாக மழை பெய்ததால் கரும்பு விளைச்சல் குறைவாகத்தான் இருந்தது. பராமரிப்பு செலவும் அதிகமாக இருந்தது. ஒரு கட்டு 350 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். பல பொதுமக்கள் விலையை கேட்டவுடன் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த வருடம் கரும்பு தட்டுப்பாடு அதிகம்.
பொங்கல் பண்டிகையையொட்டி கோவைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரி லாரியாக கரும்பு வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திண்டுக்கல், சேலம், சங்ககிரி, மதுரை, மேலூர், கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நேற்று முன்தினம் இரவு 40 லாரிகளில் கரும்பு ‘லோடு’ கள் வந்தன.
இவை மதுரை மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவளர்ச்சோலை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ.80 -க்கு விற்கப்படுகிறது.
லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ள கரும்பை இறக்கி வைத்து வியாபாரம் செய்ய முடியாது. லாரிகளில் வைத்து அப்படியே தான் விற்கிறோம். லாரி காலியானால் தான் லாரியை சொந்த ஊருக்கு ஓட்டி செல்ல முடியும், அதுவரை லாரிகள் இங்கு தான் நிற்கும்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுக்கு கரும்பு கொள்முதல் செய்தது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் தற்போது நிறுவனங்கள், பொதுமக்கள் கரும்புகளை அதிக அளவில் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் கரும்பு கடைகளை அமைத்திருக்கிறோம். இந்த பொங்கலுக்கு வியாபாரம் எந்தளவிற்கு நடைபெறும் என்பதை கணிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி மாரி, கோவை மகேஸ்வரன், கோவை ஜெபசிங் ஆகியோர் உடனிருந்தனர்.