தூய்மை கங்கை : தூய்மை மற்றும் தடையற்ற நீரோட்டத்தில் நாட்டின் மன உறுதிக்கான சாட்சியம்
மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர்
திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
7, ஆகஸ்ட், 2021 இந்தியாவுக்கு ஒரு முக்கியமான கொண்டாட்ட தருணமாக அமைந்திருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் அன்றையதினம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று நமக்கு பெருமை சேர்த்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வு தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை. அதாவது, பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தமது ஈட்டியை தூய்மை கங்கை திட்டத்திற்காக ஏலம் விட நன்கொடையாக வழங்கினார். பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகையை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் பாரம்பரியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
2014-ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, கங்கையின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தூய்மை கங்கை இயக்கத்தை தொடங்கி வைத்தார். தடையற்ற நீரோட்டம், தூய்மையான நீரோட்டம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் தூய்மை கங்கை இயக்கம் தொடங்கப்பட்டது.
இதுவரை இந்த தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.32,898 கோடி மதிப்பில் 406 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கழிவு நீர் சுத்திகரிப்பு, நதியின் முகத்துவார மேம்பாடு, நதியின் அடித்தளப்பகுதி சுத்திகரிப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, வனமயமாக்குதல், பொதுமக்கள் விழிப்புணர்வு, தொழிற்சாலை கழிவுநீர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் 275 திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மற்ற திட்டங்கள், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. 177 கழிவு நீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களை கங்கை படுகையில் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட நிலையில் கிடைத்த வெற்றியை அடுத்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டு புதிய உத்வேகத்துடன் தூய்மை கங்கை திட்டத்தின் 2-வது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது யமுனை மற்றும் அதன் துணை நதிகளான காளி, கோமதி, ஹிண்டன், தாமோதர் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படுகிறது.
தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க புகழ்பெற்ற 3-வது தரப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தூய்மை கங்கை இயக்கத்தின் மூலம் கிடைத்த நேர்மறையான அனுபவங்கள், நாட்டின் மற்ற நதிகள் புனரமைப்புக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.
கங்கையின் சூழல் தூய்மை மக்களின் ஆன்மீகத்துக்கும் பெருமளவு உதவிகரமாக உள்ளது. கும்பமேளா உள்ளிட்ட விழாக்களின் போது 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கங்கைளில் புனித நீராடுகின்றனர்.
தூய்மை கங்கை இயக்கத்தின் புதிய கட்டம் மிகச் சிறப்பான தருணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் நேரம், 75வது விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடும் தருணம் போன்ற முக்கியமான கட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “இந்தியா ஒரு நிலப்பரப்பு மட்டுமே அல்ல, இங்கு ஒவ்வொரு கல்லிலும் சிவபெருமான் உள்ளார். ஒவ்வொரு நீர்த்துளியும் கங்கையின் நீர்த்துளியாகவே விளங்குகிறது” என்று அடல் பிகார் வாஜ்பாய் ஒருமுறை கூறினார். அந்த மாபெரும் தலைவரின் கனவுகள் தற்போது நிறைவேறுகின்றன.