கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவதை சாதிப்பதற்கு சூரிய எரிசக்தி இந்தியாவுக்கு உதவும்
திரு ஆர் கே சிங்
மத்திய மின்சாரம் மற்றும் புதிய,
புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர்
சூரிய எரிசக்தி புரட்சியின் உச்சத்தில் உலகம் உள்ளது. சூரிய எரிசக்தி என்பது உலகில் அபரிமிதமாக கிடைக்கின்ற தூய எரிசக்தி வளம் மட்டுமின்றி சர்வதேச பருவநிலை செயல் திட்டத்திற்கு பொதுவான எரிசக்தியாகவும் விளங்குகிறது.
சூரிய எரிசக்தி என்பது வளரும் நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு, எளிதில் எரிசக்தி கிடைப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி வளர்ந்த நாடுகளில் மின்கல எரிசக்தி சேமிப்பு, மின்சார வாகன மின்னேற்ற கட்டமைப்பு, ஹைட்ரஜன் உற்பத்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் எரிசக்தி மாற்றத்தை பயன்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
செலவு, எளிதில் கிடைப்பது, எளிதான பராமரிப்பு ஆகியவற்றில் இதர எரிசக்தி தொழில்நுட்பங்களை விட சூரிய எரிசக்தி மேம்பட்டதாக இருப்பினும் இது எதிர்கொண்டுள்ள முக்கியமான சவாலுக்கு தீர்வு காண்பது அவசியமாக உள்ளது. உலக அளவில் சூரிய மின்சக்திக்கான தகடுகள் (போட்டோவோல்டிக்) உற்பத்தி, விநியோக தொடரில் மிகச்சில நாடுகளே கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாக அண்மைக்காலத்தில் இவற்றின் விலை அதிகரித்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் மிகக்குறைந்தபட்ச அளவாக உலக அளவில் 5,000 ஜிகாவாட் உற்பத்தி திறனுக்கான சூரிய மின்சக்தி தகடுகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சூரிய மின்சக்தியின் விலை வீழ்ச்சி மற்றும் உலக அளவில் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுவதால் உற்பத்தி அளவு சுமார் 10,000 ஜிகாவாட்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 800-1000 ஜிகாவாட் என்ற அளவில் கூடுதலாக சூரிய மின்சக்தி தகடுகள் தேவைப்படும் என்பது இதன் பொருளாகும்.
தேவையின் அதிகரிப்பு காரணமாக சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிப்பை அதிகப்படுத்த உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாலிசிலிகான், சிலிகான் கட்டிகள், சிலிகான் செல்கள், உயர்திறன் கொண்ட தகடுகள் போன்றவற்றின் உற்பத்தி அதிகரிக்கும்.
சோலார் பிளஸ் மின்கலன்கள் உட்பட புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வருவது போட்டித்தன்மையை உருவாக்கும். புதிய சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தி மற்றும் வழங்கல் தொடரில் 2030-க்குள் லட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடியும். அபரிமிதமாக சோலார் எரிசக்தி கிடைப்பதால் இதற்கு இணையான தொழில்நுட்பம் வேறு எதுவும் இல்லை. இது வீடுகளுக்கும்,சமூகங்களுக்கும் எரிசக்தியில் தற்சார்பை ஏற்படுத்துகிறது. 2070-ல் கரியமில வாயு வெளியேற்றம் முற்றிலுமாக இல்லாத நிலையை உருவாக்கும் இந்தியாவின் நோக்கத்திற்கு சூரிய எரிசக்தி ஒரு திருப்புமுனையாக அமையும்.
கட்டுரையாளர் : மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுபிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர், சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணியின் தலைவர். இதில் உள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் ஆகும்.