இந்தியா நாளொன்றுக்கு சராசரியாக 9 மில்லியன் அளவுக்கு நேரடிப் பயன் பரிமாற்றம் செய்துள்ளது (2021-22-ம் நிதியாண்டில்)
டிஜிட்டல் வழி பணப்பரிவர்த்தனையில் இந்தியா தற்போது உலக அளவில் முன்னணியில் உள்ளது. மேலும், மக்களின் வாழ்க்கை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் இந்தியா முதன்மையான நாடாக இருக்கிறது. இந்திய சந்தை மற்றும் பிற துறைகளில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் தீர்வுகள், உலக நாடுகளால் பொறாமையுடன் உற்று நோக்கப்படுகின்றன. இந்தியா, டிஜிட்டலை முன்னிலைப்படுத்துகிறது. டிஜிட்டல், இந்தியாவை முன்னிலைப்படுத்துகிறது. இதற்கு பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் நேரடி பயன் பரிமாற்றத்தின் வெற்றி குறித்து பேசுகையில், அவர் இதனை தெரிவித்தார். 2013-ம் ஆண்டுக்குப்பின் ரூ.24.8 கோடிக்கு மேல் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில், இது ரூ.6.3 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 90 லட்சத்துக்கும் அதிகமாக நேரடி பயன் பரிமாற்றம் இருந்துள்ளது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின்கீழ், 10 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு, சுமார் ரூ.20,000 கோடி மாற்றப்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டில் மட்டும் 8,840 கோடிக்கும் அதிகமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. 2022-23-ம் நிதியாண்டில் (ஜூலை 24 2022 வரை) ஏறக்குறைய 3,300 கோடி அளவுக்கு, ஒருநாளில் சராசரியாக 28.4 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் துறையில் செய்யப்படும் முதலீடுகள் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு உதாரணம். இதிலிருந்து ‘வளரும்’ நாடுகள் மட்டுமின்றி ‘வளர்ந்த’ நாடுகளும் கற்று கொள்ளலாம்.