மேட்டுப்பாளையம் நகரமன்ற அண்ணா திமுக உறுப்பினர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
மேட்டுப்பாளையம் அண்ணா திமுக நகர மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் சலீம், தனசேகர், சுனில் குமார், மருதாசலம், முத்துசாமி, குரு பிரசாத், மீரா மைதீன், கலைச்செல்வி, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் எண் 25ல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மணி நகர் உயர் நிலைப்பள்ளியில் ரூபாய் 187.39 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் நூலகம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பணியை ஒரு ஒப்பந்ததாரருக்கும் வழங்கப்பட்டு விட்டது.
கடந்த 17.5.2022 இல் நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் கொண்டு வந்த போது இதற்கு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் சார்பாகவும் அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் அண்ணா திமுக நகர மன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
எனவே அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இன்று மீண்டும் நகர மன்ற தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அறிவு சார் மையம் வருவது அனைவருக்கும் மகிழ்ச்சியே, ஆனால் அதை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடம் மட்டுமே அப்பகுதி மக்களுக்கு உடன்பாடில்லை.
இதற்கு காரணம் இந்த பள்ளியில் சரியான வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். சரியான கழிவறை இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை.
பள்ளிக்குத் தேவை விளையாட்டு மைதானமும் தரமான கழிவறையும் வகுப்பறைகளுமே, அது மட்டுமல்லாமல் நாளை இப்பள்ளி மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இட வசதியும் இல்லாமல் உள்ளது. இச்சூழ்நிலையில் அவ்விடத்தில் அறிவுசார் மையம் திறக்கப்படுமேயானால் பள்ளியின் எதிர்காலம் கேள்விக் குறியாகும். மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லாமல் போகும். ஆகவே இதை கண்டித்து அண்ணா திமுக நகர மன்ற உறுப்பினர்கள் 9 பேரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்த்து பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு இந்த அறிவு சார் மைய திட்டத்தை கைவிடுமாறும் அல்லது அறிவு சார் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறும் அண்ணா திமுக நகர மன்ற உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.