விலையில்லா மருந்து யோகா
யோகா சிறந்த விலையில்லா மருந்து என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்
யோகா சிறந்த விலையில்லா மருந்தாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி காந்தித்திடலில் நடைபெற்ற பெருந்திரள் யோகா பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது அதிகரித்து வரும் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை யோகா மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கையில் யோகா நமது மனதை ஒருமுகப்படுத்துகிறது. யோகா உடற்பயிற்சியாகவும் மருந்தாகவும் மன அமைதி தருவதாகவும் உள்ளது என்றார்.
இத்தகைய பலன்கள் பலவற்றைத் தருகின்ற யோகாவை நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிகப் பெரும் முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததையும் நமது நாட்டில் தோன்றிய அற்புதக் கலையை உலகமே கொண்டாடுமாறு அவர் செய்ததையும் டாக்டர் எல். முருகன் நினைவுகூர்ந்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநரும், தெலங்கானா துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.