எதிர்பார்ப்புகளை மிஞ்சி இந்திய வேளாண்மை
செழித்துள்ளது

நமது புகழ்மிக்க தொலைநோக்குக் கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்து வகையிலான முயற்சிகள் காரணமாக நாடு அபரிதமான அறுவடையை பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களின் வடிவில், அரசின் உறுதிப்பாடு மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வகையில், அமைச்சகம் எடுத்த பல்வேறு புதுமையான முன்முயற்சிகள், நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நிலையை நோக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வழிவகுத்தது. விவசாயிகளின் வாழ்வாதார தரம் முன்னேறியுள்ளது. மத்திய அரசு வழங்கிய வேளாண்மை நிதி, நேரடியாக அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் மூலம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் சென்றடைந்துள்ளது. பல்வேறு அம்சங்களில், விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. வேளாண்மை சாத்தியமான தொழிலாக உருவெடுத்துள்ளதால், ஒரு புதிய அலை கண்கூடாகத் தெரிகிறது. வேளாண்மை தொழில் முனைவோராக விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்தமுயற்சியை அரசின் திட்டங்கள் மற்றும் அனைத்து இதர நடவடிக்கைகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. வேளாண்மை துறையை விவசாயிகளுக்கு ஏற்றதாக மாற்றும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. வேளாண்மைக்கு நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1.32 லட்சம் கோடியாகும். விவசாயிகளின் நலனில் மத்திய அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பு தான் இது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்மைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. வேளாண்மையில் வளர்ச்சிப் பயணம் இத்துடன் நின்றுவிடவில்லை. ஒதுக்கீட்டை அதிகரித்தது தவிர, உணவு தானியங்கள், தோட்டக்கலை பயிர்களின் சாதனை உற்பத்தி, பட்ஜெட் ஒதுக்கீடு சரியான திசையில் செலவிடப்பட்டு வருவதற்கு ஆதாரமாகும். 2021-22 ஆம் ஆண்டுக்கான 3-வது முன்பண மதிப்பீட்டின்படி உணவு தானிய உற்பத்தி சுமார் 315 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டிருந்தது. தோட்டக்கலைத் துறை உற்பத்தி 334 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
கொவிட் பெருந்தொற்று சாவல்களுக்கு இடையே இது சிறிய விஷயம் அல்ல. தேவைப்பட்ட பல நாடுகளுக்கு இந்தியா உணவு தானியங்களை விநியோகித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரின் போது கூட, இந்தியா உலகிற்கு உணவு தானியங்களை விநியோகிக்கும் மிகப்பெரிய நாடாக மீண்டும் உருவெடுத்தது. நாட்டில் உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டுமல்லாமல், வேளாண்மை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஏறக்குறைய ரூ.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
விவசாயிகளுக்கு சிறப்பான வருவாயையும், வாழ்வாதாரத்தையும் வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, காரிப். ரபி பருவ பயிர்கள் மற்றும் இதர வணிக பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2013-14-ஆம் ஆண்டில், குவிண்டாலுக்கு ரூ.1,310 ஆக இருந்த நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போது ரூ.1,940-ஆக உயர்ந்துள்ளது. இதே போல 2013-14-ன் குவிண்டாலுக்கு ரூ.1,400 ஆக இருந்த கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போது ரூ.2,015 ஆக உயர்ந்துள்ளது.

2021-22 ரபி சந்தைப் பருவத்தின் போது குறைந்தபட்ச ஆதரவு விலையில், 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இது முன்பு எப்போதையும் விட அதிகமாகும். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத், இமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கோதுமை அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த வெற்றிக் கதை இத்துடன் முடிவடையவில்லை. ரபி சந்தைப் பருவத்தின் போது ரூ.85,604.40 கோடி, 49.19 லட்சம் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வெளிப்படையான முறையில், செலுத்தப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளுக்கான அரசின் தொடர் அர்ப்பணிப்பு நடவடிக்கையாக, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், சுமார் 1.82 லட்சம் கோடி, சுமார் 11.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது (மொத்தம் ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சமமான தவணைகளில்) இந்தத் திட்டம் மத்திய அரசின் மிகவும் விரிவான முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். மேலும், இடைத்தரகர்களுக்கு இடமின்றி விவசாயிகள் மீது அரசின் அர்ப்பணிப்புக்கு அடையாளமாகும்.

மண்வளத்தை முன்னேற்றுவது தொடர்பான உண்மையான முயற்சிகளை நிறைவேற்றும் வகையில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மண் வளத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பான விளைச்சலை அடைய செயல் திறன் மிக்க சிறந்த வேளாண் தொழில்நுட்ப உத்திகளை விவசாயிகள் தெரிந்துகொள்வதற்கு இத்திட்டம் வகை செய்கிறது.
பிரதமர் திரு மோடியின் வழிகாட்டுதலின் கீழ் அரசு இயற்கை விவசாயத்திற்கு சிறப்பு நடைமுறைகளை வகுத்துள்ளது. இந்த
ஆண்டு பொது பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதன் கீழ், மண் வளத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வளப்பாதுகாப்பின் மூலம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் விரிவான செயல்திட்டத்தின் மூலம் கங்கை நதியின் இருகரைகளிலும் இயற்கை வேளாண்மை மூலம் ஐந்து கிலோ மீட்டர் பரப்பைக் கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் அரசின் சிந்தனை இத்துடன் நின்றுவிடவில்லை. இயற்கை வேளாண்மை தொடர்பான பாடத்திட்டத்தை இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் வகுப்புகளில் சேர்க்க இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ், அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. வேளாண் அமைச்சகம் மற்றும் ஐசிஏஆர் ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையை ஆதரித்து வருகின்றன. சமகால இயற்கை வேளாண்மையைக் கருத்தில் கொண்டு ஐசிஏஆர், இயற்கை வேளாண்மை தொடர்பான துணைப் பாடத்திட்டங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றை சேர்க்குமாறு வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை விடுத்துள்ளது. இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கக் கூடியதாகும். சிறப்பான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கிய மத்திய அரசின் புதுமையான சிந்தனையின் அடையாளமாகும் இது.

பல்வேறு திட்டங்கள் தவிர விவசாயிகள் மீதான மத்திய அரசின் அர்ப்பணிப்பு, வேளாண் உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதில் பிரதிபலிக்கிறது. சேமிப்புக் கிடங்குகள், சுங்க வாடகை மையங்கள், தொடக்க பதப்படுத்தும் அலகுகள், பிரித்தல் மற்றும் மதிப்பீ்ட்டு அலகுகள், குளிர்பதன சேமிப்பு நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த அடிப்படை வசதிகளின் மூலம், விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்தி பொருட்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், அரசு தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ இயக்கத்தை ஊக்குவிக்க சிறப்புக் கவனம்செலுத்தி வருகிறது. இதே போல தேசிய வேளாண் சந்தை (இ-நாம்), பிரதமர் உழவர் நுண்ணீர் பாசனத்திட்டம், எம்ஐடிஎச்-ன் கீழ் வேளாண் எந்திரமயமாக்கல் மற்றும் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் மற்றம் தலங்கள் மூலம், அரசு விவசாயிகளுக்கு அதிக பயன்களை வழங்க உறுதி பூண்டுள்ளது.
பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரிடர் ஏற்பட்டால் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் மேலும் விவசாயிகளை கொண்டுவரும் வகையில், “எனது காப்பீடு எனது கையில்” இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் முக்கியத்துவம், விவசாயிகள் சுமார் ரூ.21,000 கோடி பிரீமியம் செலுத்தி ரூ.1.15 லட்சம் கோடி, பயிர்ச் சேதத்திற்கான காப்பீடாக பெற்றுள்ளதன் மூலம் விளங்கும்.

உழவர் பயிர்த் திட்டம், பிரதமர் திரு மோடியின் மற்றொரு முக்கியமான கருத்தாக்கமாகும். வேளாண் உற்பத்திப் பொருட்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், சிறப்பு ரயில்கள், அழுகும் வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல இயக்கப்படுகின்றன. இது விவசாயிகள் மீதான அரசின் உறுதிப்பாடு மற்றும் நம்பகத்தன்மைக்கு மிகப் பெரிய அடையாளமாகும். இதுவரை 2,500 நடைகள், நாட்டின் 175 தடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உழவர் ரயிலின் வெற்றியை மதிப்பிடலாம்.

இந்தாண்டு வேளாண் அமைச்சகத்தின் பட்ஜெட்டில், வேளாண் ஸ்டார்ட் அப்-கள், வேளாண் தொழில் முனைவோருக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திசையில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் பலன்களும் தெரியத் தொடங்கியுள்ளன. மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஏற்ற திட்டங்கள் மூலம், நமது வேளாண் துறை புதிய உச்சத்தை எட்ட இதுவே சரியான தருணமாகும். வேளாண் துறை மீதான நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் ஏராளமாக உள்ளன. நமது பெருந்தன்மை மிக்க ஆற்றல் மிகு பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் உள்ள அரசு, இதை நன்றாக உணர்ந்துள்ளது.
தற்போது அரசு பொதுமக்களுடன் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும், மாநில அரசுகளும், அதன் அமைப்புகளும் கொண்டாடி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மத்திய வேளாண் மற்றும் குடும்பநல அமைச்சகம், விவசாயிகள் மீது அர்ப்பணிப்பை காட்டி, “விவசாயி பங்கேற்பு எங்கள் பிரச்சாரத்தின் முன்னுரிமை” என்ற இயக்கத்தை கடந்த ஏப்ரல் 25 முதல் 30-ம் தேதி வரை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறது. இந்தப் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் உள்ள வேளாண் அமைச்சகத்தின் அனைத்துத் துறைகள், நிறுவனங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சுமார் 725 வேளாண் அறிவியல் மையங்கள், உழவர் விழாக்கள், உழவர் சம்மேளனங்கள், பயிலரங்குகள், காணொலி கருத்தரங்குகள், வட்ட மேஜைகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் மத்திய மாநில அமைச்சர்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்த வழியில் நாடு சுதந்திரத்தின் 100-வது ஆண்டுவிழாவை வேளாண்மையில் ஈடு இணையற்ற வெற்றியை பெறும். இந்தக் கனவுடன் தற்சார்பு வேளாண்மை, தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதை நோக்கி நாம் அனைவரும் நடைபோடுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *