வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்,

 

வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க பெரும் ஊக்கம் அளிக்கப்படுகிறது, பெரும் சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்

 

கேன் திரைப்பட சந்தையான ‘மார்ச்சே டு பிலிம்’ அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தொடங்கிவைத்தார். வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் படம் பிடிப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியாவை மாற்றும் நோக்கில், வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பதற்குமான 2 திட்டங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று அறிவித்தார். ஒலி-ஒளி இணை தயாரிப்புக்கான ஊக்குவிப்புத் திட்டம், மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டம் என, இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்குத் தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக தயாரிப்பதற்கு ரூ.2 கோடி வரையிலும், வெளிநாட்டுப்படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ரூ.2.5 கோடி வரையிலும் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அதாவது, கூட்டாக படம் தயாரிக்கும் சர்வதேச திரைப்பட நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்படக்கூடிய தகுதி வாய்ந்த செலவினத்தில் 30% வரை திரும்பப் பெறலாம். வெளிநாட்டுத் திரைப்படங்களை இந்தியாவில் படம் பிடிப்பதற்கு 5% ஊக்கத்தொகை அதாவது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் கூடுதலாக (65,000 அமெரிக்க டாலர்) திரும்பப் பெறலாம். இந்தியத் திரைப்படங்கள் சமூக அடிப்படையில் ஆழமாக வேரூன்றியவை என்று குறிப்பிட்ட திரு அனுராக் தாக்கூர், இந்திய சினிமாவில் காணப்படும் படைப்பாற்றல், உயர் சிறப்புத் திறன் மற்றும் புதுமைகள், சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்றும் தெரிவித்தார். இந்திய மக்களின் நன்மதிப்பு, நம்பிக்கை மற்றும் அனுபவங்களை பிரதிபலிக்கும் இந்தியத் திரைப்படங்கள் அவர்களது நம்பிக்கை எதிர்பார்ப்பு மற்றும் சாதனைகளை எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

 

இந்தியத் திரைப்படத்துறை தனது எழிலார்ந்த பயணம் வாயிலாக, சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை ஈர்த்திருப்பதுடன், 2022-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த காலக்கட்டமாக மாற்றியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். டிஜிட்டல் / ஓடிடி தளங்கள் இந்தியத் திரைப்படத்துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்பிருந்ததைவிட தற்போது சர்வதேச மற்றும் இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

இந்தியாவை, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவது என்ற மத்திய அரசின் உறுதியான நோக்கம் பற்றி குறிப்பிட்ட திரு அனுராக் தாக்கூர், “நாங்கள் வலிமையான அறிவுசார் சொத்துரிமை முறையைப் பெற்றிருப்பதோடு, தற்போது டிஜிட்டல் ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள், இதுவரை இல்லாத வகையில், ரசிகர்களின் விருப்பத்தை ஜனநாயகமயமாக்கியிருப்பதுடன், படைப்பாற்றல் மிக்க தொழிலுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் பாதுகாப்பு அளிப்பதே அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

 

தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் கீழ், திரைப்படங்களை மீட்டெடுப்பதற்கான உலகின் மாபெரும் திட்டத்தை இந்தியா தொடங்கியிருப்பதாகவும், இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மொழிகளையும் சேர்ந்த 2200 திரைப்படங்கள் அவற்றின் பழம் பெருமையுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

 

இந்திய அரங்கை பாராட்டிய திரு தாக்கூர், “இந்திய அரங்கம் நமது மகுடத்தில் ஒரு வைரக்கல் என்றும் உங்களது முயற்சிகள் மற்றும் நம்பிக்கையின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகியிருப்பதுடன், இந்தியாவின் எதிர்கால கனவுகளுக்கு முன்னோடியாக இது திகழும்” என்றும் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில், 53-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கான அதிகாரபூர்வ சுவரொட்டியையும், அமைச்சர் வெளியிட்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை தமன்னா பாட்டியா, சர்வதேச திரைப்படத் தொழில்துறைக்கு பல்லாண்டு காலமாக இந்தியா பங்களிப்பு ஆற்றிவரும் நிலையில், நாடு தற்போது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், கேன் திரைப்பட விழாவை இந்தியாவுடன் கூட்டு சேர்த்திருப்பது உண்மையிலேயே தனிச்சிறப்பு மிக்கது என்று தெரிவித்தார். நடிகர் ஆர் மாதவன், இசையமையப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், திருமதி ஊர்வசி ரவுத்தேலா, திரு மாமேகான், நடிகை தீபிகா படுகோனே, திரு சேகர் கபூர், நடிகை பூஜா ஹெக்டே, வாணி திரிபாதி, தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா, திரைப்படத் தணிக்கை வாரியத்தலைவர் திரு பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

கேன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனுப்பிய செய்தியை, பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வாசித்தார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *